முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழா: தெலங்கானா முதல்வர் பங்கேற்பு
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழா நடைபெறுகிறது. இதில், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற தலைப்பில், தமிழ்நாடு அரசு கல்வியில் செய்த சாதனைகள், சிறப்புகள் குறித்த மாபெரும் கொண்டாட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். மேலும், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.
நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் நான் முதல்வன், முதல்வரின் காலை உணவு திட்டம், புதுமை பெண், தமிழ் புதல்வன் திட்ட பயனாளிகள், விளையாட்டு சாதனையாளர்கள், சிறப்பு குழந்தை சாதனையாளர்கள் பங்கேற்று, தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர். கல்வி சார்ந்த 5 முக்கிய திட்டங்கள், சாதனைகளை முன்னிலைப்படுத்தி 7 பகுதிகளாக விழா நடைபெறுகிறது.