திருநங்கையர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக சென்னை மற்றும் மதுரையில் ரூ.43.88 லட்சத்தில் அரண் இல்லம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை: திருநங்கையர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக சென்னை மற்றும் மதுரையில் ரூ.43.88 லட்சம் செலவில் ‘அரண்’ திருநங்கையர்களுக்கான இல்லங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திருநங்கைகள் எதிர்நோக்கும் சமூக, மனநலம் மற்றும் பாதுகாப்பு சார்ந்த சவால்களை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு பாதுகாப்பான, மதிப்பும் மரியாதையும் நிறைந்த, ஆதரவான வாழ்விட சூழலை உருவாக்கும் நோக்கில், தமிழ்நாடு அரசு ‘அரண் இல்லம்’ எனப்படும் சிறப்பு மையங்களை நிறுவத் தீர்மானித்து முதற்கட்டமாக, சென்னை - செனாய்நகர் மற்றும் மதுரை மாநகர் - அண்ணாநகர் ஆகிய இடங்களில் ரூ.43.88 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள அரண் இல்லங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்ட திருநங்கை, திருநம்பி, இடைபாலின நபர்களுக்கு 1 வாரம் முதல் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை பாதுகாப்பான மற்றும் தற்காலிக தங்குமிடம் வழங்குதல் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தின் அடையாள அட்டை பெற்ற எந்த மாவட்டத்தை சேர்ந்த நபரும் பயன்பெறுவதோடு, ஒவ்வொரு இல்லத்திலும் 25 நபர்கள் தங்க அனுமதிக்கப்படுவர்.
இந்த இல்லங்களில் உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு, பள்ளி மற்றும் கல்லூரியில் இடைநின்றவர்கள் கல்வியை தொடர உதவுதல், உயர் கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்துதல், உள்ளுறைவோரின் தேவைகளுக்கேற்ப உளவியல் மற்றும் தொழில்முறை ஆலோசனைகள் வழங்குதல், சுயதொழில் தொடங்க வழிகாட்டுதல் மற்றும் நிதியுதவி வழங்குதல், திருநங்கையருக்கு எதிரான வன்முறை, பாகுபாடுகள் குறித்து புகார் அளிக்க உதவுதல், இலவச சட்ட உதவி மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், குடும்பத்தால் நிராகரிக்கப்பட்டவர்களை மீண்டும் குடும்பத்துடன் இணைக்க முயற்சித்தல் மற்றும் குடும்பத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவை ஒருங்கிணைந்த முறையில் வழங்கப்படும்.