சென்னை: கோவையில் ரூ.126 கோடியில் அமைக்கப்பட உள்ள தங்கநகை தொழில் பூங்காவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். கோவையில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்க கோரி தங்க நகை தொழில் சார்ந்தோர் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். 5-11-2024ல் கோவை வந்த முதலமைச்சரிடம் இதுகுறித்த கோரிக்கையை துறை சார்ந்தவர்கள் மீண்டும் முன் வைத்தனர். இதனை தொடர்ந்து நகைப்பட்டறை அதிகமாக உள்ள கெம்பட்டி காலனி, செல்வபுரத்தில் முதல்வர் நேரில் சென்று ஆய்வு நடத்தி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து உடனடியாக கோவையில் தங்க நகை தொழிலாளர்கள் மற்றும் நகைக்கடை உரிமையாளர்கள் பயன் பெறும் வகையில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார். அதற்கான முன்னெடுப்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன. கோவையில் மட்டும் 40 ஆயிரம் நகைப்பட்டறைகள் உளளன. 1.50 லட்சம் நேரடி மற்றும் மறைமுக தொழிலாளர்களாக உள்ளனர்.
அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில் 126.12 கோடி ரூபாய் மொத்த திட்ட மதிப்பீட்டில், முதற்கட்டமாக 81.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 தளங்களுடன் கோவை குறிச்சி சிட்கோவில் இந்த தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. 2.46 ஏக்கரில் பூங்கா அமைகிறது. 2 ஆயிரம் பேர் நேரடியாகவும், 1500 பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெறுவார்கள். இந்த தங்க நகை பூங்காவில் பாதுகாப்பு கருவி, சிசிடிவி, 350 பட்டறைகள் அமைய உள்ளன.
தரைத்தளத்தில் வாகன நிறுத்தும் வசதி, முதல் தளத்தில் வரவேற்பறை, தர சோதனை ஆய்வகம், பாதுகாப்பு பெட்டகம், தொழிலாளர்களின் குழந்தைகள் காப்பகம், பொதுவசதி மையம், மாநாட்டு வளாகமும், 2 முதல் 5வது தளம் வரை நகை உற்பத்தி கூடம் அமைக்கப்பட உள்ளது. இந்த தொழில் பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. விழா மேடைக்கு வந்த முதல்வருக்கு கட்சியினர், தொழில் துறையினர் பூங்கொத்து, புத்தகம் கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தங்க நகை தொழில் பூங்காவிற்கான கல்வெட்டை திறந்து வைத்து பணிக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் பொற்கொல்லர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவர்கள் முதல்வருக்கு நினைவு பரிசு வழங்கினர்.