சிஎம்டிஏவுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 14 உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார்
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் சிஎம்டிஏவுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 14 உதவியாளர்களுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பணி நியமன ஆணைகளை வழங்கினார். சென்னை, எழும்பூர், தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அலுவலகக் கூட்டரங்கில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 14 உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
கடந்த நான்கரை ஆண்டுகளில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் 85 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பதவி உயர்வு மூலமாகவும், 92 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாகவும், நேரடி நியமனம் மூலமாகவும் நியமிக்கப்பட்டு, காலி பணியிடங்கள் வெகுவாக குறைக்கப்பட்டு சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் நிர்வாகம் சீராக செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் காகர்லா உஷா, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர்/முதன்மைச் செயலாளர் பிரகாஷ், முதன்மை செயல் அலுவலர் சிவஞானம், தலைமைத் திட்ட அமைப்பாளர்கள் ருத்ரமூர்த்தி, ரவிக்குமார், தலைமைப் பொறியாளர் மகாவிஷ்ணு, மாவட்ட வருவாய் அலுவலர்கள் இந்துமதி, பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.