Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சிஎம்டிஏவின் தொடர் நடவடிக்கையால் நவீனமயமாக்கப்பட்ட கோயம்பேடு சந்தை

* 4 ஆண்டுகளாக தீவிரப்படுத்தப்பட்ட மேம்பாட்டு பணிகள்

* சோலார், சிசிடிவி, மருத்துவ மையம் போன்ற வசதிகள்

* மாசில்லா சந்தை பிளாஸ்டிக் இல்லாத மற்றும் கார்பன் சமநிலை சந்தையை உருவாக்க ரூ.10 கோடியில் ஐஐடி குழு மூலம் அறிக்கை தயாரிப்பு.

ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தையான கோயம்பேடு மார்க்கெட் கடந்த 1996ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மொத்தமாக 295 ஏக்கர் பரப்பளவில் சுமார் 4,000 கடைகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த சந்தையில் காய்கறி, பூ, பழம் மற்றும் மளிகை பொருட்களுக்கு என தனித்தனியாக கடைகள் உள்ளன. குறிப்பாக, 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளில் மொத்த மற்றும் சில்லரை விற்பனை நடக்கிறது. கோயம்பேடு சந்தைக்கு சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளில் இருந்து காய்கறி கடைக்காரர்கள், பூ வியாபாரிகள், தள்ளுவண்டி கடைக்காரர்கள் என தினசரி 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பொருட்களை வாங்கி செல்கின்றனர். மேலும், விழா காலங்களில் பொதுமக்கள் கூட்டமும் வருவதால் ஒரு லட்சம் பேர் வரை பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

அதேபோல், தினந்தோறும் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. வெளி மாநில வாகனங்கள் மற்றும் சில்லரை வியாபாரிகளின் வாகனங்கள் என 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வருகின்றன. இது தவிர்த்து தமிழகம் முழுவதும் இருந்தும் காய்கறி, மளிகை பொருட்கள் வருகின்றன.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் கீழ் அங்காடி நிர்வாக குழு மூலம் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வரும் கோயம்பேடு சந்தை வளாகத்தை மழைநீர் வடிகால், சாலைகள் மற்றும் கழிவறைகளை சீரமைப்பது, மின்சாரம், போக்குவரத்து நெரிசல் என அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 3941 கடைகள் உள்ள ஒரு பகுதியில் நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் வருவதால் சந்தையை ஒழுங்குபடுத்தி வெளிநாட்டு மார்க்கெட் போல் மேம்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் நவீன வசதிகளுடன் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிஎம்டிஏ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தை நவீன முறையில் சீரமைக்க ஆலோசனை குழு அமைக்கப்பட்டு அவர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் தற்போது பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. ஒரு சில பணிகள் குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம். வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதியே மார்க்கெட் வளாகம் நவீனமயமாக்கப்பட்டு வருகிறது.

சுத்திகரிக்கப்படும் இயந்திரம் மூலம் சுத்திகரிப்பு செய்யப்படும் தண்ணீரில் இருந்து தேக்கமடையும் நீரை வீணாக்காமல் அவற்றை கழிவறைக்கு எடுத்து சென்று பயன்படுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 4 ஆண்டுகளில் கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தை நவீனமயமாக்கும் நோக்கத்துடன் சூரிய மின்சக்தி அமைத்தல், கூடத்தில் கேமராக்கள் அமைத்தல், நவீன கட்டுப்பாடு அறைகள், உயர்மின் விளக்குகள், மருத்துவ சிகிச்சை மையம் ஆகியவை புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் பிரதான நுழைவாயில், வர்ணம் பூசுதல், குளிர்பதன கிடங்கு, பூங்கா அமைத்தல், மழைநீர் வடிகால், கழிவுநீரேற்ற நிலையம் புனரமைத்தல், மலர் அங்காடியில் மின் தூக்கிகள் அமைத்தல் போன்ற பணிகள் நடந்து வருகிறது. மேலும் போக்குவரத்து வாகன நெரிசல் பிரச்னை கடந்த காலங்களில் பண்டிகை நாட்களில் இருந்தது. அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விரைவில் தூய்மையான சந்தையாக கோயம்பேடு சந்தை மாறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

* சிறப்பு திட்டம்

கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம் ரூ.10 கோடியில் மேம்படுத்தப்படும். கோயம்பேடு சந்தை வளாகத்தை பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத பகுதியாக மாற்ற சிறப்பு திட்டம் ரூ.25 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.

* முதன்முறையாக மஞ்சள் பை மிஷின்

கோயம்பேடு சந்தை நவீனமயமாக்கலை தொடர்ந்து பிளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக துணிப்பைகளை ஊக்குவிக்கும் நோக்கில் 5 இயந்திரங்கள் மூலம் முதன்முறையாக மீண்டும் மஞ்சள் பை திட்டம் கொண்டுவரப்பட்டது.

* பொதுக்கழிவறைகள்

கோயம்பேடு அங்காடி வளாகத்தில் திடக்கழிவு பதப்படுத்தும் நிலையம் மற்றும் கட்டணமில்லா கழிவறைகள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். கோயம்பேடு ஆரம்ப காலம் முதல் செயல்பாட்டிலிருந்த கட்டண கழிவறைகள் அனைத்தும் கட்டணமில்லா பொதுக் கழிவறைகளாக மாற்றப்பட்டுள்ளது. இருமுறை குப்பை அகற்றம்: சந்தையில் திருவிழா நாட்கள் மட்டுமின்றி தினமும் இருமுறை குப்பை அகற்றம் செய்யப்படுகிறது.

* ஆதரவற்றோர் காப்பகத்திற்கு 600 கிலோ காய்கறி

தினசரி விற்பனை ஆகாமல் தேக்கமடையும் சுமார் 600 கிலோ காய்கறிகளை மொத்த வியாபாரிகளிடம் இருந்து பெற்று அங்காடி நிர்வாக குழு மூலம் 40க்கும் மேற்பட்ட முதியோர் மற்றும் ஆதரவற்றோர் காப்பகத்திற்கு சுழற்சி முறையில் வழங்கப்பட்டு வருகிறது.

* கணினி மயமாக்கல்;

தேவையற்ற வாகனங்களை தவிர்க்கும் வகையில் சந்தை வளாகத்தில் உள் நுழைவு வாயில்கள் அனைத்தும் கணினி முறையில் நவீனமயமாக்கப்பட்டுள்ளது.