Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டிற்கு சர்வதேச முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் முதல் வாரம் வெளிநாடு பயணம்: இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு செல்கிறார்

சென்னை: தமிழ்நாட்டிற்கு சர்வதேச முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் முதல் வாரத்தில் வெளிநாடு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லண்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்க்க ஆகஸ்ட் 31ம் தேதி புறப்பட்டு செப்டம்பர் 10ம் தேதி சென்னை திரும்பும் வகையில் பயணத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பயணத்தின்போது, உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து பல புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் 2030ம் ஆண்டுக்குள் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை 1 டிரில்லியன் டாலர் என்ற அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற இலக்குடன் தொழில் மேம்பாட்டு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார். அதன் ஒரு பகுதியாக வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நாடுகளின் முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு பெற்று வருகிறார்.

இதுவரை அவர் 4 முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு உள்ளார். 2021ம் ஆண்டு மே மாதம் முதல்வர் பொறுப்பை ஏற்றப் பிறகு முதல் முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2022ம் ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு சென்றார். அங்கு ரூ.6,100 கோடி அளவுக்கு தொழில் ஒப்பந்தங்கள் செய்து வந்தார். இதன்மூலம் தமிழகத்தில் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. பிறகு 2023ம் ஆண்டு சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சென்று ரூ.1,342 கோடி ஒப்பந்தங்கள் செய்தார். இது சுமார் 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தரும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஸ்பெயின் நாட்டுக்கு சென்று ரூ.3,440 கோடிக்கு தொழில் ஒப்பந்தங்கள் மேற்கொண்டார். கடந்த ஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் அமெரிக்காவுக்கு சென்று ரூ.7,616 கோடிக்கு பல்வேறு தொழில் மேம்பாட்டு ஒப்பந்தங்கள் செய்து வந்தார்.

இது 11,516 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் சூழலை கொடுத்திருக்கிறது. இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழில் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக 5வது முறையாக வெளிநாடு செல்ல திட்டமிட்டு உள்ளார். இந்த முறை அவர் இங்கிலாந்து, ஜெர்மனி நாடுகளுக்கு செல்ல இருக்கிறார். அநேகமாக இந்த மாத இறுதியில் அவர் வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்வார் என்று தெரிய வந்துள்ளது. இல்லையெனில் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் அவரது பயணம் இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த இரு நாடுகளிலும் பல்வேறு தொழில் அதிபர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச இருக்கிறார். அப்போது தமிழகத்திற்கு தொழில் தொடங்க வருமாறு, அவர்களுக்கு முதல்வர் அழைப்பு விடுக்கிறார்.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவர்கள் மத்தியில் உரையாற்ற இருக்கிறார். லண்டனில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்க உள்ளார். முதலமைச்சரின் முழுமையான பயணத் திட்டம் இன்னும் சிறிது நாட்களில் அதிகாரப்பூர்வமாக தெரியவரும். முதல்வர் மு.க.ஸ்டாலின் இங்கிலாந்து, ஜெர்மனி இரு நாடுகளிலும் சுமார் ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் பயணம் மேற்கொள்வார் என்று தெரிகிறது. தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில் முதலமைச்சரின் தொழில் முதலீடு ஈர்ப்பு பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.