காரைக்குடி, ராமநாதபுரம், மானாமதுரை நிர்வாகிகளுடன் முதல்வர் சந்திப்பு: தொகுதி நிலவரம் குறித்து கேட்டறிந்தார்
சென்னை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான திமுக முழுவீச்சில் களத்தில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் உள்ள திமுக நிர்வாகிகளை சந்திக்க திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார். இதையடுத்து ‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகள் சந்திப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் 13ம் தேதி முதல் தொடங்கி நடத்தி வருகிறார். இதுவரை அவர் 100 தொகுதி நிர்வாகிகளை நேரில் சந்தித்து பேசியிருந்தார்.
இந்நிலையில் திமுக தலைவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று காரைக்குடி, ராமநாதபுரம், மானாமதுரை ஆகிய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து பேசினார். சந்திப்பின் போது சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள், அறிவுரைகளை வழங்கினார். மேலும் கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும். அதற்காக இரவு, பகல் பாராமல் உழைக்க வேண்டும் என்று அப்போது அவர் அறிவுரை வழங்கினார். மேலும் நிர்வாகிகளிடம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் (எஸ்ஐஆர்) செயல்பாடு குறித்தும் விசாரித்தார்.



