சென்னை, கோட்டூர்புரத்திலுள்ள முதலமைச்சரின் உதவி மையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு
சென்னை: கோட்டூர்புரத்திலுள்ள முதலமைச்சரின் உதவி மையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டறிந்தார். முதலமைச்சரின் உதவி மையம், 1100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுடன், சென்னை, கோட்டூர்புரத்தில் ஏப்ரல் -2024 முதல் செயல்பட்டுவருகிறது. இம்மையம் தினமும் 16 மணி நேரம், மூன்று முறை மாற்றுப் பணிகளில் (shifts), காலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை, 120 பணியாளர்களுடன், வாரத்தின் ஏழு நாட்களும் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது. மேலும், இ-சேவை தொடர்பான சேவைகளின் கோரிக்கைகளை கையாள தனியாக 20 பிரத்யேக இருக்கைகள் கொண்ட மற்றொரு உதவி மையமும் முதலமைச்சரின் உதவி மையத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
இம்மையத்திற்கு இன்று வருகை தந்த முதலமைச்சர், முதலமைச்சரின் உதவி மையத்தின் பணிகளின் நடைமுறைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ், மனுக்களின் தீர்வு நிலையினை தர மதிப்பீடு செய்யும் அலுவலர்களிடம் தீர்வின் தன்மை குறித்து முதலமைச்சர் கேட்டறிந்து, உரிய அறிவுரைகளை வழங்கினார். இந்த மையத்தில், நாளொன்றிற்கு ஏறத்தாழ 13,000-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வரப்பெறுகிறது. மேலும், “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களில், தீர்வு செய்யப்பட்ட மனுக்களின் தரத்தினை ஆய்வு செய்ய, தினமும் தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டு, “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட பயனாளிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, அவர்களது மனுக்கள் முறையாக தீர்வு செய்யப்பட்டதா என்று தரமதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.
இப்பணிக்காக நாளொன்றிற்கு சுமார் 2,800 அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டு, இதுவரை இத்திட்டத்தில் மனு செய்து பயன்பெற்ற 77,000 பொதுமக்களிடம் பின்னூட்டம் பெறப்பட்டுள்ளது. முதலமைச்சர். பொதுமக்களிடம் கனிவாக பேசி, அவர்களின் கோரிக்கைகளை உடன் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி, விவரங்களை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமென்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர்
நா. முருகானந்தம், முதலமைச்சரின் தனிப் பிரிவு சிறப்பு அலுவலர் ஜெயஷீலா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.