முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் இதுவரை 3,600 கோயில்களுக்கு குடமுழுக்கு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், இதுவரை 3,600 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னை சூளை அங்காளபரமேஸ்வரி மற்றும் காசி விசுவநாதர் சுவாமி கோயிலில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நேற்று நடந்தது. இதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டார்.
பின்னர், அவர் அளித்த பேட்டி:
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின், இந்து சமய அறநிலையத்துறை ஆகம விதிப்படி குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவடைந்த திருக்கோயில்களை கண்டறிந்து திருப்பணிகளை மேற்கொண்டு தொடர்ந்து குடமுழுக்கு நடத்தி வருகின்றது. அந்த வகையில் இன்றைய தினம்(நேற்றைய தினம்) நடைபெற்ற 95 திருக்கோயில்களின் குடமுழுக்கையும் சேர்த்து 3,600 திருக்கோயில்களுக்கு இதுவரை குடமுழுக்கு நடந்தேறியுள்ளது. சென்னையில் சூளை அங்காளபரமேஸ்வரி திருக்கோயில், புரசைவாக்கம் வேத விநாயகர் திருக்கோயில், பேரக்ஸ் ரோடு ஆஞ்சநேயர் திருக்கோயில், தங்க சாலை கமல விநாயகர் திருக்கோயில், அயனாவரம்பவானி அம்மன் திருக்கோயில், அண்ணா நகர் அங்காளபரமேஸ்வரி திருக்கோயில், விருகம்பாக்கம் மகாகாளியம்மன் திருக்கோயில், மயிலாப்பூர் அருள்மிகு சித்தேரி விநாயகர் திருக்கோயில் என 8 திருக்கோயில்களுக்கு இன்று(நேற்று) வெகு விமரிசையாக குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
சூளை அங்காள பரமேஸ்வரி மற்றும் காசி விசுவநாதர் திருக்கோயில் ரூ.28.56 லட்சத்தில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. திருக்கோயிலின் விமானம் மற்றும் கொடிமரமானது 1,310 கிலோ செப்பு தகட்டில் நகாசு வேலைகள் செய்யப்பட்டு, அதன் மீது 874 கிராம் தங்கத்தை கொண்டு தங்க மூலாம் பூசப்பட்டுள்ளது. இப்படி திருக்கோயில்களில் திருப்பணிகள், பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீட்டெடுப்பு, புதிய தேர்கள் உருவாக்கம் மற்றும் மராமத்து பணிகள், கட்டணமில்லா ஆன்மிகப் பயணங்கள் என ஆன்மிகப் பெரியோர்கள் மற்றும் இறை அன்பர்கள் போற்றும் வகையில் திராவிட மாடல் அரசு ஆன்மிக அரசாக திகழ்ந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.தர், சென்னை மண்டல இணை ஆணையர் முல்லை, கவுன்சிலர் ராஜேஸ்வரி தர், முன்னாள் எம்எல்ஏ கே.எஸ். ரவிச்சந்திரன், பெருநகர சென்னை மாநகராட்சி நியமனக்குழு உறுப்பினர் சொ.வேலு, திருப்பணி ஒருங்கிணைப்பாளர் ஜி.கருணாகரன், உதவி ஆணையர் க.சிவகுமார், மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.