சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். நேற்று முன்தினம் காலை நடைபயிற்சி மேற்கொண்டபோது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான தலை சுற்றல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தேவையான அனைத்து பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும், 3 நாட்கள் ஓய்வில் இருக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர். மேலும் நேற்று காலை தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடந்தன. மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு மீண்டும் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார். தொடர்ந்து, அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.
இந்நிலையில், மருத்துவமனைக்கு வந்த மு.க.அழகிரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து விசாரித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
முதல்வர் நலமாக உள்ளார். இன்று (நேற்று) காலை சில பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து கண்கணித்து வருகின்றனர். அவர் உடல் நலம் குறித்து மருத்துவர்கள் சார்பில் அறிக்கை வெளியிடப்படும். தற்போது 3 நாட்கள் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார். இவ்வாறு அவர் கூறினார்.