Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முதலீடுகளின் முதல்வர்

வரும் 2030ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்த வேண்டுமென இலக்கை நிர்ணயித்து, அதற்கேற்ப பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழக அரசு சார்பில் கடந்த 2024ம் ஆண்டு சென்னையில் 2 நாட்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் சிங்கப்பூர், கொரியா, இங்கிலாந்து உள்ளிட்ட 9 நாடுகள் பங்கேற்றன‌. இந்த மாநாட்டின் மூலம் ரூ.6,64,180 கோடி முதலீடு பெறப்பட்டது. இதன்மூலமாக பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டது. தொடர் முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தியதன் மூலம் இதுவரை ரூ.10 லட்சம் கோடியளவில் தொழில் முதலீடுகள் தமிழகத்தை நோக்கி ஈர்க்கப்பட்டுள்ளன. சுமார் 2.50 லட்சம் பேருக்கு மேல் வேலைவாய்ப்பு சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் சீர்குலைந்திருந்த தமிழகத்தின் பொருளாதாரத்தை, முதல்வர் பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்து சீர்படுத்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

கடந்த ஜூலை கடைசி வாரத்தில் உடல்நலம் லேசாக பாதிக்கப்பட்ட சூழலிலும் ஓய்வெடுக்க விரும்பாமல் தொடர்ச்சியாக பணியாற்றி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மருத்துவமனையில் இருந்து கொண்டே அதிகாரிகளுடன் ஆலோசனை, பின்னர் மாவட்டங்களில் நலத்திட்டங்கள் விழா, காலை உணவு விரிவாக்கத் திட்டம் உட்பட பல்வேறு அரசு விழாக்கள், கூட்டணி கட்சிகளின் நிகழ்வுகள், கட்சி சார்ந்த தேர்தல் நடவடிக்கைகள் என பரபரப்புக்கு பஞ்சமில்லாத முதல்வராகவும், அரசியல் தலைவராகவும் மிளிர்கிறார். தனது பொருளாதார முன்னேற்ற நடவடிக்கையின் அடுத்தக்கட்டமாக தற்போது ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கேயும் பொருளாதார முதலீடுகளை குவித்து வருகிறார்.

கடந்த ஆக.30ம் தேதி சென்னையில் இருந்து ஜெர்மனி புறப்பட்ட அவர், கடந்த 1ம் தேதி முதல்கட்டமாக ஜெர்மனியின் டசெல்டோர்ப் நகரில் நார் பிரெம்ஸ், நோர்டெக்ஸ் குழுமம், ஈபிஎம்-பாப்ஸ்ட் ஆகிய மிகப்பெரிய நிறுவனங்களுடன் ரூ.3,201 கோடி முதலீட்டில் சுமார் 6,250 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.

தொடர்ந்து ஜெர்மனியில் நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் 26 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் கையெழுத்திடப்பட்ட மொத்த முதலீடுகள் ரூ.7,020 கோடியாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் 15,320 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தனது ஜெர்மனி பயணத்தை நிறைவு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இங்கிலாந்திலும் பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளார். முன்பெல்லாம் சென்னை, கோவை ேபான்ற நகரங்களில்தான் ஐடி பூங்காக்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் அதிகளவு இருக்கும். அந்த நிலை மாறி தற்போது மதுரையில் ரூ.800 கோடி செலவில், 2 கட்டமாக ஐடி பார்க் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்ததாக திருச்சி, நெல்லையில் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் வேகமெடுத்துள்ளன. பிரபல வெளிநாட்டு கம்பெனிகள் சென்னையை தொடர்ந்து, தென்மாவட்டங்களிலும் தங்களது கிளைகளை பரப்பியுள்ளன. ஒரு பக்கம் மாநிலத்தை நோக்கி முதலீடுகள், மறுபக்கம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் என முதல்வர் மு.க.ஸ்டாலினின் பொருளாதார வளர்ச்சித்திட்டங்கள் பாராட்டிற்குரியவை. இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளதற்கு இத்திட்டங்களை சரியான முறையில் செயல்படுத்துவதும் முக்கிய அம்சமாகும்.