Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மேகமூட்டமான காலநிலை காரணமாக தேயிலை செடிகளில் கொப்புள நோய் தாக்குதல் அதிகரிப்பு

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் நிலவும் மேகமூட்டமான காலநிலையால் தேயிலை செடிகளில் கொப்புள நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது.நீலகிரி மாவட்ட மக்களின் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது. ஊட்டி, கோத்தகிரி, மஞ்சூர், கூடலூர் உட்பட மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தேயிலை விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கடந்த மே மாதம் துவங்கி 2 மாதங்கள் நல்ல மழை பெய்தது. இதனைத்தொடர்ந்து விவசாயிகள் உரமிட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொண்டதால், மேலும் மழை காரணமாக பசுந்தேயிலை மகசூலும் அதிகரித்தது. மழை பெய்து அதன் பின்னர் நன்கு வெயில் அடித்தால் மட்டுமே தேயிலை மகசூல் அதிகரிக்கும்.

இதனிடையே வடகிழக்கு பருவமழையும் விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் பகல் நேரங்களில் மேகமூட்டமான காலநிலை நிலவி வருகிறது. மேலும் லேசான வெயில், மேகமூட்டமான காலநிலை, பனிப்பொழிவு என பல்வேறு வகையான மாறுபட்ட காலநிலைகள் நிலவுவதால் பசுந்தேயிலை வளர்ச்சி பாதிப்படைந்துள்ளது.

மழைக்கு பின் போதுமான அளவு வெயில் இல்லாததால் தேயிலை செடிகளில் வளர்ந்துள்ள தேயிலை கொழுந்து இலைகளில் கொப்பள நோய் பாதிப்பு ஏற்பட துவங்கியுள்ளது. ஊட்டி, மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளில் கொப்புள நோய் தாக்குதலால் பல ஏக்கர் பரப்பளவிலான தேயிலை செடிகள் பாதிப்படைந்துள்ளன.

கொப்புள நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பசுந்தேயிலை பறித்து தேயிலை தூள் உற்பத்திக்கு பயன்படுத்த முடியாது என்பதால், தேயிலை மகசூல் அதிகரித்தும் நோய் தாக்குதலால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட கூடிய சூழல் உருவாகியுள்ளது. மேலும் ேமகமூட்டமான காலநிலை தொடர்ந்து வரும் நிலையில் கொப்பள நோய் தொடர்ந்து பரவி வருகிறது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரம் தேயிலை விவசாயத்தை நம்பியே உள்ளது. மழை காரணமாக தேயிலை மகசூல் அதிகரித்த நிலையில், தற்போது நிலவி வரும் மந்தமான காலநிலையால் தேயிலை செடிகளில் கொப்புளநோய் பாதிப்பு ஏற்பட துவங்கியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேகமூட்டமான காலநிலை மாறி மழை பெய்தால் மட்டுமே பசுந்தேயிலை மகசூல் அதிகரிக்கும்’’ என்றனர்.