மேகவெடிப்பால் ஏற்பட்ட பேரழிவால் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம்: உத்தராகண்ட், இமாச்சலுக்கு 7 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
டேராடூன்: மேகவெடிப்பால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து மீண்டு வரும் இமாச்சல் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் அடுத்த 7 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. உத்தரப்பிரதேசம், மத்தியபிரதேசம், டெல்லி, பஞ்சாப், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே கடந்த 5ஆம் தேதி இரட்டை மேக வெடிப்புகளால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் அடித்து செல்லப்பட்டன.
இந்த இயற்கை பேரழிவில் 5 பேர் பலியான நிலையில் 1000க்கும் அதிகமானோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மலைப் பாதைகளின் ஏற்பட்ட நிலச்சரிவில் உருக்குலைந்த சாலைகள் மற்றும் ஆற்று மேம்பாலங்களை சீரமைக்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெரிதும் பாதிக்கப்பட்ட தாராலி, ஹர்ஷில் ஆகிய பகுதிகளில் மருத்துவ முகாம்கள் மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆற்றில் சேர்ந்துள்ள கட்குவியல்கள் மற்றும் மண்ணில் யாரும் புதைந்து உள்ளனரா என மோப்ப நாய் மற்றும் நவீன கருவிகள் கொண்டு தேடி வருகின்றனர். வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு டேராடூனில் இருந்து நிவாரண பொருட்களை உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர்சிங் அனுப்பிவைத்தார். ஹெலிகாப்டர் மூலமாகவும் நிவாரண பொருட்கள் எடுத்துச்செல்லப் படுகின்றன. உத்தரப்பிரதேசத்தில் கங்கை, ராம்கங்கா ஆகிய ஆறுகளில் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில் ராம்கங்கா ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து அபாய அளவை தாண்டி தண்ணீர் கரைப் புரண்டு ஓடுகிறது, அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. ஆறுபோல பெருகேடுத்து ஓடும் மழை வெள்ளம், ரயில்வே சுரங்கப்பாதையை மூழ்கடித்துள்ளது. தலைநகர் டெல்லியில் நேற்று விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் நகர் முழுவதும் வெள்ளக்காடான நிலையில் யமுனை ஆற்று நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனி டையே மழை வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள உத்தராகண்ட், இமாச்சல் பிரதேசம் மாநிலங்களில் அடுத்து 7 நாட்களுக்கு 20 சென்டிமீட்டர் வரை மழை கொட்டித்தீற்கும் என இந்தியா வானிலை மையம் எச்சரித்துள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்திற்கு வரும் 13 ஆம் தேதி 21 சென்டிமீட்டருக்கு அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மத்தியப்பிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கர், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு வரும் 13ஆம் தேதியில் இருந்து 16ஆம் தேதி வரை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.