Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பிரபல துணிக்கடை நிறுவனத்திற்கு சொந்தமான 30 இடங்களில் ஐடி ரெய்டு: வரி ஏய்ப்பு குற்றச்சாட்டால் அதிரடி, முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

சென்னை: வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் சென்னையில் உள்ள பிரபல துணிக்கடைக்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. சென்னையை தலைமையிடமாக கொண்ட கோ ஸ்பேஷன் இந்தியா லிமிடெட் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் ‘கோ கலர்ஸ்’ என்ற பெயரில் பெண்களுக்கான பிரத்யேக துணிக்கடைகளை நடத்தி வருகிறது.

இந்த நிறுவனத்திற்கு டெல்லி, மும்பை, கொல்கத்தா என நாடு முழுவதும் 200 நகரங்களில் 780 கிளைகள் உள்ளன.  தமிழகத்தில் மட்டும் ‘கோ கலர்ஸ்’ நிறுவனத்திற்கு 118 கடைகள் உள்ளன. இதுதவிர ‘கோ கலர்ஸ்’ நிறுவனத்திற்கு ஆன்லைன் ஷாப்பிங்கும் உண்டு. இதுதவிர பெண்களுக்கு ஆடை வடிவமைப்பதில் நாட்டின் முதன்மை நிறுவனமாக ‘கோ கலர்ஸ்’ இருப்பதால் பெண்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இதனால் ஆண்டுக்கு பல நூறு கோடி வரை வருமானம் ஈட்டி வருகிறது.

இந்நிலையில் ‘கோ கலர்ஸ்’ நிறுவனத்தின் ஆண்டு வருவாயை குறைத்து வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதைதொடர்ந்து ‘கோ கலர்ஸ்’ துணிக்கடைக்கு சொந்தமான குறிப்பாக தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

குறிப்பாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் உரிமையாளரின் வீடு, நுங்கம்பாக்கத்தில் உள்ள கடை மற்றும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி பகுதிகளில் உள்ள பிரபல வணிக வளாகங்களில் உள்ள கடைகள் என பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் பல சிக்கியதாக கூறப்படுகிறது.

மேலும், பெண்களுக்கான ஆடைகள் இறக்குமதி செய்யதது தொடர்பான ஆவணங்கள், நிறுவனத்தின் ஆண்டு வருமானம், கடைகளில் வரும் வருமானம், ஆன்லைன் ஷாப்பிங்கில் வரும் வருமானம் தொடர்பாக ஆவணங்களை கைப்பற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனை நாளை (இன்று)யும் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் சோதனை முடிவில் தான் ‘கோ கலர்ஸ்’ நிறுவனம் எத்தனை கோடி ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு வரிஏய்ப்பு செய்து இருக்கிறது என்று முழு விவரம் தெரியவரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.