ஊட்டி: நீலகிரியில் தொட்டபெட்டா, அவலாஞ்சி உள்ளிட்ட சில பகுதிகளில் கனமழை மற்றும் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், இன்று மட்டும் சூழல் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவ மழை துவங்கி 2 மாதங்கள் பெய்யும். இந்த மழை பொதுவாக இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்க்கும். கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது. குறிப்பாக, குன்னூர், கோத்தகிரி, குந்தா மற்றும் ஊட்டி ஆகிய பகுதிகளில் மழையின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படுகிறது. நேற்று மழை சற்று குறைந்த போதிலும், அதிகாலை நேரங்களில் கடும் மேகமூட்டம் மற்றும் சாரல் மழை பெய்தது. இன்று காலை (22ம் தேதி) கடும் மேகமூட்டமும், பரவலாக சாரல் மழையும் காணப்பட்டது.
இதனால், பெரும்பாலான பகுதிகளில் அதிகாலை நேரங்களில் வாகனங்களை இயக்க ஓட்டுனர்கள் சிரமப்பட்டனர். முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்களை இயக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. மேலும், கடந்த ஒரு வாரமாக கால நிலையில் மாற்றம் ஏற்பட்டு மழை பெய்து வரும் நிலையில், குளிரும் அதிகரித்துள்ளது. இதனால் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சூழல் சுற்றுலா தலங்கள் மூடல்: தொட்டபெட்டா, அவலாஞ்சி பகுதிகளில் கனமழை மற்றும் காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. இதனால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பைன் பாரஸ்ட், 8வது மைல் ட்ரீ பார்க், தொட்டபெட்டா, அவலாஞ்சி, கெய்ர்ன்ஹில் ஆகிய சூழல் சுற்றுலா தலங்கள் இன்று (22ம் தேதி) ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.