Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

எங்கள் நெருங்கிய கூட்டாளியான இந்தியா மீது கூடுதல் வரி விதிப்பது ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கை: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் விளக்கம்

நியூயார்க்: ‘குட்மார்னிங் அமெரிக்கா’ டிவி நிகழ்ச்சிக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ பேட்டி அளித்த போது அவரிடம், ‘‘ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் மீண்டும் அச்சுறுத்துகிறார். ஆனால் பின்வாங்குகிறார். உக்ரைன் போரை தீவிரப்படுத்திய புடினுக்கு இன்னும் எவ்வளவு அவகாசம்தான் டிரம்ப் தருவார்’’ என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு ரூபியோ, ‘‘இந்த விஷயத்தில் ரஷ்யாவுக்கு எதிராக டிரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார் என்றே நினைக்கிறேன். உதாரணத்திற்கு, இந்தியா மீது நாங்கள் கூடுதல் வரிகளை விதித்துள்ளோம்.

இந்தியா, அமெரிக்காவின் மிக நெருக்கமான கூட்டாளி. ஆனாலும், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது நாங்கள் கூடுதல் வரி விதித்துள்ளோம். மற்றபடி, நேற்று கூட இந்திய அமைச்சரை சந்தித்து வர்த்தக பேச்சுவார்த்தையை நாங்கள் நடத்தியிருக்கிறோம். இந்தியாவுக்கு கூடுதல் வரி விதித்தது ரஷ்யாவுக்கு எதிரானது’’ என்றார். ‘‘ரஷ்யா மீது ஏன் எந்த நேரடி நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என கேட்டதற்கு ரூபியோ, ‘‘ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியா, சீனா மீது வரி விதிக்க வேண்டுமென அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாமின் மசோதா கொண்டு வந்தார். அந்த மசோதாவைத் தொடர்ந்து வரி விதிக்கப்பட்டது. இன்னமும் ஐரோப்பாவில் உள்ள பல நாடுகள் ரஷ்யாவிடம் எரிவாயு, எண்ணெய் வாங்கி வருகின்றன. இது போர் நிறுத்த முயற்சியை நேரடியாக பாதிக்கிறது ’’ என்றார்.

* இந்தியா-பாக். போரை டிரம்ப் நிறுத்தினார்

அமைச்சர் ரூபியோ கூறுகையில், ‘‘இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான மோதல் ஆபத்தான கட்டத்தில் இருந்தது. அதை முடிவுக்கு கொண்டு வருவதில் அதிபர் டிரம்ப் முக்கிய பங்கு வகித்தார். மேலும், தாய்லாந்து-கம்போடியா, காங்கோ-ருவாண்டா, அஜர்பைஜான்-ஆர்மீனியா போன்ற பல மோதல்களை தீர்ப்பதில் டிரம்ப் முக்கிய பங்காற்றினார். ஆனாலும் உக்ரைன் போர் அசாதாரண சவாலாக உள்ளது’’ என்றார்.