Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தூய்மைப்பணியை தனியாருக்கு வழங்கும் மாநகராட்சி தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை மாநகராட்சியில், இரண்டு மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதி கே.சுரேந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சங்கம் தரப்பில் வழக்கறிஞர் குமாரசாமி ஆஜராகி, தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க முடியாது. அதற்கு தொழிலாளர் நீதிமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும். மாநகராட்சியின் நடவடிக்கையால் 2000 தூய்மைப் பணியாளர்களின் வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

15 ஆண்டுகள் பணியாற்றியவர்களை குப்பை போல தூக்கி எறியக்கூடாது என்று வாதிட்டார். மாநகராட்சி தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், பணியாளர்களை வீசி எறியப் போவதில்லை. அவர்கள் வேலையை விட்டு வெளியேற்றப்பட மாட்டார்கள். ஒப்பந்ததாரர் மூலம் பணி வழங்கப்படும். சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் 11 மண்டலங்களில் தூய்மைப் பணி ஏற்கனவே தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டு விட்டன.

தற்போது ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 2000 தூய்மைப் பணியாளர்களுக்கும், ஒப்பந்த நிறுவனம், அதிக ஊதியத்துடன், வருங்கால வைப்பு நிதி, இன்சூரன்ஸ் உள்ளிட்ட சலுகைகளுடன் வேலை வழங்கும் என்று தெரிவித்தார்.  ஒப்பந்த நிறுவனம் தரப்பில், தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவது அரசின் கொள்கை முடிவு. இந்த முடிவில் விதிமீறல் இருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும். இதுவரை 341 பணியாளர்கள் மட்டுமே பணிக்கு வந்துள்ளனர்.

அவர்களுக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. 1,900 பணியாளர்கள் தேவை என்ற நிலையில், பணிக்கு சேர்வதற்கான கால அவகாசத்தை ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்க தயார் என்று தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி, சென்னை மாநகராட்சியின் இரண்டு மண்டலங்களில் தூய்மைப்பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது. தூய்மைப்பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற நிலை எழவில்லை. சென்னை மாநகராட்சி, ஒப்பந்ததாரர் நிறுவனத்துடன் கலந்து பேசி தூய்மைப்பணியாளர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.