அண்ணாநகர்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், சென்னை கோயம்பேட்டில் உள்ள தனது இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; தெற்கு ரயில்வேக்கு பொதுமக்களிடம் இருந்து பல கோரிக்கைகள் வந்தன. தமிழகத்தில் 38 ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்றுசெல்ல மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நடவடிக்கை எடுத்துள்ளார். எக்ஸ்பிரஸ், உள்ளூர் ரயில்கள் வேறு, வேறு நிலையத்தில் நின்று செல்லும். 6,626 கோடி ரூபாய் இந்த நிதி ஆண்டுக்கு ரயில் திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது ரூ.871 கோடி மட்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இன்று வந்தே பாரத் ரயில்கள் இந்திய தொழில்நுட்பத்தில் ஐசிஎப்பில் தயாரிக்கப்படுகிறது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் விமான நிலையத்துக்கு இணையாக பணி நடைபெறுகிறது. ரயில் திட்டங்கள் மூலம் திருநெல்வேலி உள்ளிட்ட 18 மாவட்டங்கள் பயன்பெறும். தென்னக ரயில்வே இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வு தேர்வில் மாநில மொழி உள்ளிட்ட 3மொழிகளில் கேள்வித்தாள் தரப்பட வேண்டுமென்பது விதி. ஆனால் தமிழ் கேள்வித்தாள் இல்லாமல் தேர்வு நடைபெற்று உள்ளது என்ற மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு தவறானது. உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 22ம் தேதி தமிழகம் வருகிறார்.
அமலாக்கத்துறை சுதந்திரமான அமைப்பு, அவர்கள் தங்களது வேலையை செய்கிறார்கள். அமலாக்கத்துறை சோதனை என்பது ஆவணத்தின் அடிப்படையில் தன்னிச்சையாக செயல்படுகிறது. தமிழகத்தில் எங்கள் கூட்டணி வலுவான கூட்டணி. எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் யாத்திரையை பார்த்து முதல்வர் பயப்படுகிறார். தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் திருமாவளவன் நிலையாக இல்லை. பட்டியலின மக்களுக்கு திருமாவளவன் மிகப்பெரிய துரோகம் இழைத்து வருகிறார். பட்டியலின மக்கள் மீது சிறிதளவும் அக்கறை இல்லை. கேள்வி கேட்டால் கூட்டணியில் இருந்து விலகநேரிடும் என பயப்படுகிறார்.
இவ்வாறு கூறினார்.