Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காஸ் அடுப்பு எரிந்ததால் திக்... திக்... பூட்டிய வீட்டுக்குள் சிக்கிய சிறுவனை போராடி மீட்ட தூய்மை பணியாளர்கள்

Coimbatore, cleaning worker*பொதுமக்கள் பாராட்டு

கோவை : வீட்டுக்குள் மாட்டிக் கொண்ட சிறுவனை ஒரு மணி நேரம் போராடி தூய்மை பணியாளர்கள் மீட்டனர். காஸ் அடுப்பு எறிந்து கொண்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை, கணபதி அருகே ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள விஜி ராவ் நகரை சேர்ந்தவர் நதியா. இவர் நேற்று முன்தினம் வீட்டு சமையல் அறையில் காஸ் அடுப்பில் குக்கரில் அரிசி மற்றும் பாத்திரத்தில் வெண்ணீர் வைத்து வெளியே குப்பை கொட்டுவதற்கு வந்தார்.

அப்போது, அவரது 4 வயது மகன் ஷியாம் வீட்டின் கதவை உள் பக்கமாக தாளிட்டார். அதன் பின்னர், நதியா வீடு திரும்பிய போது கதவு உள்பக்கமாக பூட்டி இருந்ததால் கதவை தனது மகனிடம் திறக்க கூறினார். ஆனால், அவரால் கதவை திறக்க முடியவில்லை.

காஸ் அடுப்பில் குக்கர் மற்றும் பாத்திரத்தில் வெண்ணீர் கொதித்து கொண்டு இருந்ததால் நதியா படபடத்து போனார். செய்வது அறியாது திகைத்த அவர் கதறி துடித்தார். அப்போது, அந்த வழியாக சென்ற தூய்மை பணியாளர்கள் ஓடி சென்று விவரங்களை கேட்டு கதவை உடைத்து குழந்தையை பத்திரமாக மீட்டனர். அவர்களுக்கு குழந்தையின் தாய் நதியா நன்றிகளை தெரிவித்து மகிழ்ந்தார்.

ஒரு மணி நேரம் போராடி சாமார்த்தியமாக செயல்பட்டு குழந்தையை தூய்மை பணியாளர்கள் மீட்டனர். இது குறித்து தூய்மை பணியாளர்கள் சூப்பர்வைசர் பிரசாந்த் கூறியதாவது:நான் மற்றும் தூய்மை பணியாளர்கள் ரமேஷ், சக்திவேல், சரத்குமார், மாரிமுத்து, சித்திரை கணேஷ் ஆகியோர் விஜி ராவ் நகர் பகுதியில் பணியில் ஈடுபட்டு இருந்தோம். அப்போது நான், நதியா வீட்டின் வழியாக சென்ற போது அவர் அலறி துடித்து கொண்டு இருந்தார். அவரிடம் விசாரித்த போது தனது 4 வயது குழந்தை உள்ளே மாட்டி கொண்டதாகவும், அடுப்பில் குக்கரில் அரிசி மற்றும் பாத்திரத்தில் தண்ணீர் கொதித்து கொண்டு இருப்பதாகவும் கூறினார்.

மேலும், குக்கர் விசில் 5க்கு மேல் வந்ததால் அது வெடித்து விடுமோ என்றும், தண்ணீர் வற்றி ஏதாவது ஆகி விடுமோ என்றும் பயந்து படபடத்தார். இதையடுத்து பணியில் இருந்த ரமேஷ், சக்திவேல், சரத்குமார், மாரிமுத்து, சித்திரை கணேஷ் ஆகியோரை அழைத்து முதலில் கதவின் அருகே இருந்த ஜன்னல் வழியாக கதவை திறக்க முயற்சி செய்தோம். ஆனால், முடியவில்லை.

பின்னர், சமையலறை பக்கம் சென்று அங்கிருந்த ஜன்னல் வழியாக காஸ் அடுப்பை அணைக்க முயற்சித்த போதும் முடியவில்லை. இதனால், குக்கரை அடுப்பில் இருந்து கஷ்டப்பட்டு இறக்கி வைத்தோம். பாத்திரத்தில் இருந்த தண்ணீர் வற்றி விடாமல் இருக்க பைப்பில் டியூப்பை மாட்டி ஜன்னல் வழியாக கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை விட்டு வந்தோம்.

இதைத்தொடர்ந்து கதவை உடைத்து குழந்தையை மீட்க திட்டமிட்டோம். ஆனால், கதவு ஸ்டீல் கதவாக இருந்ததால் எளிதில் உடைக்க முடியவில்லை. எங்களிடம் இருந்த உபகரணங்களை வைத்து முதலில் முயற்சித்தோம். முடியாததால் அருகே கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் இருந்து கடப்பாரையை எடுத்து வந்து உடைத்து குழந்தையை பத்திரமாக மீட்டோம். சுமார் 1 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு குழந்தையை மீட்டோம். குழந்தையை மீட்டது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். குழந்தையை மீட்ட தூய்மை பணியாளர்களை பொதுமக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.