சென்னையில் 200 வார்டுகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு கழிப்பறைகளுடன் கூடிய ஓய்வறைகள் அமைக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை : சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில், "ஆரோக்கியமாக வாழ அடிப்படை தூய்மைதான். தூய்மைப் பணியாளர்கள் செய்வது வேலை அல்ல, சேவை. வெயில், மழை என எந்த பேரிடர் வந்தாலும் தூய்மை பணியாளர்கள் பணி முக்கியமானது. நகரத்தை தூய்மையாக வைத்திருக்கும் உங்களை நாங்கள் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். உங்களால்தான் சென்னை, நீர்நிலைகள் தூய்மையாக உள்ளது. காலையில் நகரம் தூய்மையாக இருக்க இரவு முழுவதும் தூய்மை பணியாளர்கள் உழைக்கிறார்கள். தன்னலம் கருதாத தூய்மைப் பணியாளர்களின் பணியை போற்றுவோம்.
ஊரே அடங்கி போயிருக்கும் இரவில் தூங்காமல் உழைப்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள். தூய்மைப் பணியாளர்களை காக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த திராவிட மாடல் ஆட்சியில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு 200 வார்டுகளிலும் ஓய்வறைகள் கட்டப்படும். உடை மாற்றும் அறை, கழிவறை உள்ளிட்ட வசதிகளுடன் 300 சதுர அடியில் ஓய்வறைகள் கட்டப்படும். இந்தியாவிலேயே க்ளீன் சிட்டி தமிழ்நாடு என்று சொல்லும் அளவுக்கு தூய்மை பணியாளர்கள் துணை நிற்க வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் டிசம்பர் 6 முதல் அனைத்து நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்."இவ்வாறு தெரிவித்தார்.


