Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டுள்ள சூழலில் வன்னியர் சங்க விழாவில் பங்கேற்க ராமதாஸ், அன்புமணிக்கு தடை: திண்டிவனம் சார் ஆட்சியருக்கு, டிஎஸ்பி பரிந்துரை

திண்டிவனம்: திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்தில் வரும் 17ம் தேதி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் ராமதாஸ், அன்புமணிக்கு தடை விதிக்கும்படி திண்டிவனம் சார் ஆட்சியருக்கு டிஎஸ்பி பரிந்துரைத்துள்ளார்.

பாமகவில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையிலான அதிகார மோதல் 8 மாதமாக நீடித்த நிலையில், கட்சியில் இருந்தே அன்புமணியை நீக்கி கடந்த 11ம் தேதி ராமதாஸ் அதிரடி நடவடிக்கை எடுத்தார். இதனால் இருதரப்பு இடையிலான உரசல் அதிகரிக்கும் சூழல் உருவானது. இந்நிலையில், திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க தலைமை அலுவலகத்தை கைப்பற்றும் போட்டியில் ராமதாஸ் தரப்பினர், அன்புமணி ஆதரவாளர்கள் மோதிக்கொண்டதால் வன்னிய சங்க அலுவலக கட்டிடத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில், இவ்விகாரம் தொடர்பாக திண்டிவனம் டிஎஸ்பி பிரகாஷ், திண்டிவனம் சார் ஆட்சியர் ஆகாஷிடம் அளித்துள்ள பரிந்துரை கடிதத்தில், வன்னியர் சங்க தியாகிகள் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்ட அக்கட்டிடத்தை பார்வையிட்டதில் அது மிகவும் சிதிலமடைந்தும், சுவர்கள் விரிசல் விட்டும் மேற்கூரை இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. அதனால் உயிர்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் இருதரப்பினரும் ஒன்றுகூடும் பட்சத்தில் அங்கு சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால் மேல் நடவடிக்கை எடுக்க (தடை செய்ய) பரிந்துரைக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, வன்னியர் சங்க அலுவலகத்தில் இருதரப்பும் அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்படும் என தெரிகிறது. இதனால் இரு தரப்பினரும் தனித்தனியாக மாற்று இடங்களில் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

மேடை இல்லாமல் மக்களை நேருக்கு நேர் மீண்டும் சந்திப்பு: ராமதாஸ் பேட்டி

ராமதாஸ் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாமக சார்பில் ஓசூரில் இன்று (14ம் தேதி) நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க நேற்று தைலாபுரத்தில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார். அப்போது அவர் அளித்த பேட்டி: மக்கள், நான் வருகிறேன் என்று சொன்னால் வருவார்கள். மக்களை பார்ப்பதற்காக நான் செல்கின்றேன். அதேபோல் மேடைகள் இல்லாமல் மக்களை சந்தித்து நேருக்குநேர் பேசி வருகிறேன். இது என்னுடைய பாணி. இடையில் விட்டுவிட்டேன், மீண்டும் தற்போது தொடங்கியுள்ளேன். எளிய மக்களை சந்திக்க, அவர்களுடன் உரையாட இது ஒருவழி, என்றார்.

விஜய் மற்றும் எடப்பாடி பழனிசாமி மக்களை திரட்டி வாகன பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதுபோன்று உங்களுடைய பயணம் இருக்குமா? என்ற கேள்விக்கு, நமது பாணியில் நாம் செய்வோம். அவர்களை குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை எனத் தெரிவித்தார். விஜய் இன்று (நேற்று) முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் என்ற கேள்விக்கு, இதற்கு நான் என்ன பதில் சொல்ல வேண்டும் என பதில் கேள்வி எழுப்பியவர், ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு பாணியில் ஆரம்பிக்கிறார்கள், அதற்கு நான் என்ன பதில் சொல்ல வேண்டும். இதெல்லாம் ஒரு கேள்வியா? என்றார். அதைத் தொடர்ந்து அன்புமணியை நீக்குவதற்கு ராமதாசுக்கு அதிகாரம் இல்லை என வழக்கறிஞர் பாலு கூறியுள்ளாரே? என கேட்டதற்கு, எந்த பதிலும் சொல்லாமல் சைகை காட்டியவாறு புறப்பட்டுச் சென்றார்.

‘முதல்வரின் முயற்சியால் தமிழகத்தில் தொழில் முதலீடுகள் குவிகின்றன’

ஓசூரில் ராமதாச் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்த்து வருகிறார். தமிழகத்தில் முதலீடுகள் குவிகின்றன. இதுதான் அனைவரின் விருப்பம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கு பாராட்டுக்கள். இது நல்லபடியாக நடக்க வேண்டும் என்பது தமிழக மக்களின் விருப்பம். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார். பாமகவில் தந்தை, மகன் இடையே ஏற்பட்ட பிரச்னைக்கு எப்பொழுது தீர்வு ஏற்படும்? என்ற செய்தியாளரின் கேள்விக்கு, அந்த பிரச்னைக்கு கடந்த 11ம் தேதியே தீர்வு ஏற்பட்டு விட்டது என ராமதாஸ் தெரிவித்தார்.