புதுடெல்லி: சூடானில் கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்ட இந்தியரை பத்திரமாக மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு தூதர் உறுதியளித்துள்ளார். ஒடிசா மாநிலம், ஜெகத்சிங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதர்ஷ் பெஹரா (36), கடந்த 2022ம் ஆண்டு முதல் சூடானில் உள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். சூடானில் ராணுவத்திற்கும், ராணுவ ஆதரவுப் படை (ஆர்.எஸ்.எஃப்.) என்ற ஆயுத குழுவிற்கும் இடையே கடந்த 2023ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வரும் நிலையில், வடக்கு டார்ஃபர் பகுதியில் உள்ள அல் ஃபாஷிர் என்ற நகரில் வைத்து ஆதர்ஷ் பெஹராவை ஆர்.எஸ்.எஃப். கிளர்ச்சியாளர்கள் கடத்திச் சென்றனர். அவரை தெற்கு டார்ஃபரில் உள்ள தங்களது கட்டுப்பாட்டுப் பகுதியான நியாலா நகருக்குக் கொண்டு சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.
இதற்கிடையே, ‘எனது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது’ என்று உதவி கோரி அவர் மன்றாடும் வீடியோ ஒன்றை அவரது குடும்பத்தினர் வெளியிட்டு, அவரைக் காப்பாற்றும்படி கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், இந்த கடத்தல் சம்பவம் குறித்து இந்தியாவுக்கான சூடான் தூதர் முகமது அப்தல்லா அலி எல்தோம் டெல்லியில் அளித்த பேட்டியில், ‘ஆதர்ஷ் பெஹராவை பத்திரமாக இந்தியாவிற்குத் திரும்ப அழைத்து வருவதை உறுதி செய்வதில் சூடான் அரசு அனைத்து விதமான உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளது. ஆயுதக் குழுக்களின் கணிக்க முடியாத தன்மையால், நிலைமை மிகவும் சிக்கலாக இருந்தாலும், பெஹரா பத்திரமாக மீட்கப்படுவார் என நம்புகிறோம்’ என்றார்.
