அரியலூர்: அரியலூரில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிஐடியு தொழிற்சங்கத்தினரை அழைத்து பேசி உள்ளோம். தமிழ்நாடு வரலாற்றில் இல்லாத வகையில் 3 ஆண்டுகளில் 2 ஊதிய ஒப்பந்த உயர்வு பேச்சுவார்த்தைகளை நடத்தி முடித்து உள்ளோம். திமுக ஆட்சியில் ஒருமுறை 5 சதவீதம் ஊதிய உயர்வும், அடுத்த முறை 6 சதவீதம் ஊதிய உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான பணபலன்களை வழங்க ரூ.1100 கோடி நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது. இந்த ஆண்டு ஓய்வு பெற்றவர்களுக்கான நிதியை வழங்கவும், நடவடிக்கை விரைவாக எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் 11 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டு, தற்போது 4000க்கும் மேற்பட்ட பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
பொதுமக்களின் பாராட்டை பெறும் துறையாக, போக்குவரத்துதுறை மாறியிருக்கிறது. அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் தங்களது போராட்டத்தை விலக்கி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.