ஊட்டி : விழிப்புணர்வு உடைய நுகர்வோராக இருந்து தரமான பொருள்களை வாங்கி தரமான மனிதர்களாக வாழ வேண்டும் என அதிகரட்டி அரசு பள்ளியில் நடந்த குடிமக்கள் நுகர்வோர் மன்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ஊட்டி அருகேயுள்ள அதிகரட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற கூட்டம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் ஷெராபின் அனிதா தலைமை வகித்தார். மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் தியாகராஜன் வரவேற்றார். குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் மனோகரன் கருத்தாளராக கலந்து கொண்டு பேசுகையில், ‘‘தரமற்ற பொருள்களை வாங்கும் நுகர்வோர் உயிரிழப்பு, நோய், பொருள் இழப்பு, ஏமாற்றம் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே அரசு உணவு பாதுகாப்பு சட்டம் போன்று பல்வேறு சட்டங்களை இயற்றி தர முத்திரைகள் வழங்கி மக்களிடையே தரமான பொருள்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு அக்மார்க் முத்திரை இடப்படுகிறது. தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்கள் உட்பட பல பொருள்களுக்கு அக்மார்க் முத்திரை வழங்கி தரம் உறுதி செய்யப்படுகிறது.
தொழிற்சாலை உற்பத்தி பொருட்களுக்கு ஐஎஸ்ஐ முத்திரை வழங்கப்படுகிறது. குழந்தை உணவுகள் மின் சாதனங்கள் போன்றவைகளுக்கு தர முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உணவு பொருள்களில் கலப்படம் மற்றும் தரக்குறைவு இல்லாத தரமான உணவு பொருள்களை உறுதி செய்ய உணவு பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது.
இச்சட்டத்தின் படி உணவு பொருள் தயாரிப்பதற்கு எப்எஸ்எஸ்ஏஐ உரிமம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கலப்படம் இல்லாத தரமான உணவு பொருள்கள் மக்களுக்கு கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. கம்பளி உடைகளுக்கு உல்மார்க், பட்டுக்கு சில்க் மார்க் வழங்கப்படுகிறது. தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருள்களுக்கு ஹால் மார்க் முத்திரை வழங்கப்படுகிறது.
அரசு நிறுவனங்கள் வழங்கும் தர முத்திரைகளைப் போன்று போலி முத்திரை இடப்படும் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். விழிப்புணர்வுடைய நுகர்வோராக இருந்து தரமான பொருள்களை வாங்கி தரமான மனிதர்களாக வாழ வேண்டும்’’ என்றார். தர முத்திரைகள் குறித்து விளக்க படங்களுடன் விளக்கம் அளித்தார். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.