புதுடெல்லி: மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் கீழ் கடந்த ஆண்டில் மட்டும் ஏழு புதிய பிரிவுகள் இணைக்கப்பட்டன. குறிப்பாக, டெல்லி நாடாளுமன்ற வளாகம், அயோத்தி விமான நிலையம், ஹசாரிபாகில் உள்ள தேசிய அனல்மின் நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கத் திட்டம், புனேயில் உள்ள தேசிய நச்சுயிரியல் நிறுவனம், பக்சர் அனல்மின் திட்டம், எட்டாவில் உள்ள ஜவஹர் அனல்மின் திட்டம் மற்றும் மண்டியில் உள்ள பியாஸ் சட்லஜ் இணைப்புத் திட்டம் ஆகியவற்றில் இப்படையின் பாதுகாப்பு விரிவுபடுத்தப்பட்டது. தற்போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும் முக்கிய முயற்சியாக, மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் தற்போதைய வீரர்களின் எண்ணிக்கையை 1,62,000 என்பதிலிருந்து 2,20,000 ஆக உயர்த்துவதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் இப்படையின் வலிமை சுமார் 58,000 வீரர்கள் அளவுக்கு அதிகரிக்கப்பட உள்ளது. இதன்மூலம் நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பை மேலும் உறுதிப்படுத்த வாய்ப்புள்ளது. இந்த புதிய திட்டத்தின்படி, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 14,000 வீரர்கள் படையில் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள். இதன்மூலம் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். ஏற்கனவே 2024ம் ஆண்டில் 13,230 வீரர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், 2025ம் ஆண்டுக்கான 24,098 வீரர்களுக்கான ஆட்சேர்ப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சேர்ப்புகள் மூலம் அனைத்து நிலைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் படையின் முற்போக்கான கொள்கைகளால் அதிக பெண் விண்ணப்பதாரர்கள் ஈர்க்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படையின் பலத்தை அதிகரிப்பாதால், விமானப் போக்குவரத்துத் துறை, துறைமுகத் துறை, அணுசக்தி மற்றும் நீர்மின் நிலையங்கள், ஜம்மு காஷ்மீரில் உள்ள சிறைச்சாலைகள் போன்ற முக்கியமான துறைகளில் பாதுகாப்புப் பணியை வலுப்படுத்த முடியும். மேலும், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் இடதுசாரி தீவிரவாதம் குறைந்துள்ளதால், அங்கு உருவாகும் புதிய தொழில் மையங்களுக்கு விரிவான மற்றும் திறமையான பாதுகாப்பை வழங்க இப்படையின் இருப்பு அவசியமாகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ப மாறிவரும் பாதுகாப்புச் சூழலுக்கு ஏற்றவாறு படையின் திறன்களை வலுப்படுத்துவதில் ஒன்றிய அரசு உறுதி கொண்டுள்ளதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.