வசீகர கண்ணழகிக்கு சினிமாவில் வாய்ப்பு; ‘தி டைரி ஆப் மணிப்பூர்’ படத்தில் நடிக்க ரூ.21 லட்சம் ஒப்பந்தம்: சமூக ஊடகங்களால் வாழ்க்கையில் திருப்பம்
மும்பை: கும்பமேளாவின் வசீகர கண்ணழகியான மோனலிசாவுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்துள்ளதால், அவர் ‘தி டைரி ஆப் மணிப்பூர்’ என்ற படத்தில் நடிக்க ரூ.21 லட்சத்திற்கு ஒப்பந்தமாகி உள்ளார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை வியாபாரம் செய்துவந்தார். இவரது அழகிய தோற்றம் காண்போரை வசீகரித்தது. யூடியூபர் ஒருவர் இவரை வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்யவே சமூக வலைதளங்களில் பெரும் வைரலாக மாறினார் அந்த பெண்.
அவரது தோற்றத்தை வைத்து அவருக்கு ‘மோனலிசா போஸ்லே’ என்று நெட்டிசன்கள் பெயர் சூட்டியுள்ளனர். பின்னர் செல்ஃபி வெறியர்களின் தொந்தரவு தாங்கமுடியாமல் கும்பமேளாவிலிருந்து தனது சொந்த ஊருக்கு மோனலிசா புறப்பட்டு சென்றுவிட்டார். அதன்பிறகு சமூக வலைதளங்களில் பிரபலமாக மாறிவிட்டார். இந்த சூழலில் பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா தனது புதிய படத்தில் மோனலிசாவை நாயகியாக நடிக்கவைக்க இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் இதற்காக மோனலிசாவின் கிராமத்துக்கு சென்று அவரை சந்தித்தார்.
இப்படத்தில் நடிகர் ராஜ்குமார் ராவின் சகோதரர் அமித் ராவ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். ‘தி டைரி ஆப் மணிப்பூர்’ என்று பெயரிடப்பட்ட படத்தில், மோனலிசா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்தப் படத்திற்காக மோனலிசாவுக்கு ரூ 21 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது. அட்வான்ஸ் தொகையாக ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு முன்பாக, மோனலிசாவுக்கு நடிப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதனால் விரைவில் அவர் மும்பை விரையவுள்ளார். கும்பமேளாவிற்கு பாசி, மணி மாலைகளை விற்ற இளம்பெண் திடீரென இணையத்தில் வைரலாகி பிறகு பாலிவுட்டில் கால்பதிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.