சினிமா கவர்ச்சியால் கூடுகிற கூட்டம் இது... ஆளுநர் ரவி, அண்ணாமலை போல விஜய் பேசுவதெல்லாம் பொய்: திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு நாகை எம்எல்ஏ ஷாநவாஸ் பதிலடி
நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அரசியல் களத்தை நாகரீகமாகவும், தமிழ்நாடு மரபுக்கு ஏற்ற களமாகவும் மேம்படுத்த நினைக்கிறோம். ஆனால் சமீபகாலமாக அரசியல் களத்தை கீழிறக்கி, அவதூறாகவும், பொய்களாகவும், வன்மத்தாலும், மாற்ற பாஜ செயல்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றார் போல் அண்ணாமலை தோன்றுவதை பேசுவார், உண்மை, பொய்யை ஆராயாமல் பேசுவார். அதேபோல ராஜ்பவனில் இருந்து ஆளுநர் ரவி, அதேபோல பேசுவார். தற்போது அண்ணாமலை அடக்கப்பட்டுள்ளார், ஆளுநர் அடங்கி உள்ளார். தற்போது அவதூறுகளை, பொய்களை, வாய்க்கு வருவதை பேசுவது உள்ளிட்டவற்றை விஜய் கையில் எடுத்து இருக்கிறார்.
தவெக என்ற கட்சியை தொடங்கி மாற்று அரசியலை தருகிறோம் என்று களத்துக்கு வந்து கொண்டு இருப்பவர் நாகப்பட்டினத்திற்கு வந்து பொய் தகவலை பேசிவிட்டு சென்று உள்ளார். எந்த ஒரு ஆய்வு செய்யாமல், அங்கு இருக்கும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை இந்த அரசு நிறைவேற்றி இருக்கிறது என்று அடிப்படை புரிதல் இல்லாமல் வன்மத்தோடு பொய் சொல்லி இருக்கிறார். விஜய் பிரசாரத்தின் போது மின்தடை செய்ய வேண்டும் எனஅந்த கட்சி மாவட்ட செயலாளர் தான் கடிதம் கொடுத்து இருக்கிறார். ஆனால் அங்கு அரசாங்கம் திட்டமிட்டு செய்தது போல பேசி உள்ளார். இது போன்று பொய் சொல்லி தன் மீது கவனத்தை ஈர்க்கும் வழக்கம் என்பது பாஜவில் தான் பார்த்தோம். தற்போது விஜய் இதனை செய்கிறார்.
என்னுடைய தொகுதியில் மீன்பிடி துறைமுக தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை இந்த ஆட்சியில் தான் அது நிறைவேற்றி ஐஐடியில் இருந்து ஆய்வு செய்யப்பட்டு ரூ.32 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல நம்பியார் நகர் பகுதியில் கடல் அரிப்பு தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர், கடந்த ஆட்சி காலத்தில் அது நிறைவேறவில்லை இந்த ஆட்சியில் ரூ.10 கோடி செலவில் கடல் அரிப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பேட்டையில் ரூ.100 கோடியில் மீன் பதப்படுத்தும் மையம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா மேம்பாடு, மீனவர்கள் நலனுக்கான திட்டம், புதிய பாலம் என பலவற்றை இந்த அரசு செய்துள்ளது.
நாகப்பட்டினம் வரலாற்றிலேயே ரூ.1,700 கோடி மதிப்பீட்டில் மிகப்பெரிய குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு, விரைவில் செயல்முறைக்கு வர இருக்கிறது. மக்கள் கோரிக்கையை நிறைவேற்றாமல் அதனை விஜய் பேசி இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ஏற்கனவே அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுவரும்போது இது போன்று பேசுவது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த நினைக்கிறார். பொய் பேசி சாதிப்பது என்ன? மக்களுக்கு மண்ணுக்கு என்ன தேவையோ அதனை பேசுங்கள். பல ஆண்டுகளாக மோசமான நிலைமையில் இருந்த மருத்துவமனையை இந்த ஆட்சி வந்த உடன் கோரிக்கை வைக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள விஜய் தமிழகத்தில் இருக்கும் அனைத்து கட்சிகளையும் விமர்சிக்காமல், திமுகவை மட்டும் விமர்சித்து வருகிறார். அவர் மத்திய அரசின் மீதும் கூட பெரிதளவில் விமர்சனம் வைக்கவில்லை. இதனால், அவருக்கு யாரோ அஜண்டா கொடுத்தது போல தெரிகிறது. தமிழ்நாட்டின் மாநில உரிமை தொடர்பான மத்திய அரசு நிலைப்பாடு, கல்வி நிலை தொடர்பான நிலைப்பாடு, நிதி ஆதாரங்கள், நதிநீர் விவாகரங்களில் மத்திய அரசின் நிலைப்பாடு என எந்த திசையிலும் மத்திய அரசு தமிழகத்துக்கு எதிராக முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இந்திய அளவில் பெரிய பிரச்னையான வாக்கு திருட்டு விவகாரத்தை அரசியலுக்கு புதிய வரவான விஜய் எந்த அளவுக்கு எடுத்து பேசி உள்ளார். விஜய்க்கு கூடுகிற கூட்டம், அவரது சினிமா கவர்ச்சிக்கு கூடுகிற கூட்டம். அதை வைத்துக்கொண்டு, இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
* ஆதாரம் இருந்தால் காட்டுங்கள்...
ஷாநவாஸ் கூறுகையில், ‘வெளிநாட்டு பயணம் குறித்து அண்ணாமலை தொடர்ந்து அவதூறு கூறி வந்தார், அதேபோல் விஜய் செய்கிறார். வெளிநாட்டில் முதலீடு செய்ய போகிறார் என்றால் ஆதாரம் காட்டட்டும் அது இல்லமால் பேசுவது ஏற்புடையது இல்லை. எங்கள் மீது வைக்கப்பட்ட குற்றசாட்டுக்கு நாங்கள் பதில் சொல்கிறோம்’ என்றார்.
* பேட்டி கொடுக்க விஜய்க்கு தைரியம் இருக்கா?
‘அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த விஜய் அவர்களே, முதலில் நீங்கள் செய்தியாளர்களை சந்தியுங்கள். அந்த தைரியம் இருக்கிறதா உங்களுக்கு? கேள்விக்கு பதில் சொல்லுங்கள். ஊடகவியலாளர்களின் கேள்விகளை எதிர்கொள்வதுதான் துணிச்சல். அரசியலில் அந்த துணிச்சல் வேண்டும்’ என்று ஷாநவாஸ் தெரிவித்தார்.
* அரசியலுக்கு 6 மாதம் கால்ஷீட்
‘தற்போது கடைசியாக ஒரு படத்திற்கு 6 மாதம் கால்ஷீட் கொடுத்தது போல, 2026 தேர்தலுக்கு 6 மாதம் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். இந்த படம் ஓடினால் தொடர்வீர்கள், இல்லையென்றால் விட்டு போய்விடுவீர்கள். இதனை கேரள நடிகையே சொல்லியிருக்கிறார்கள். அதனை விஜய்யும் மறுக்கவில்லை. இந்த அரசியல் செயற்கையாக இருக்கிறது’ என்று ஷாநவாஸ் தெரிவித்தார்.