சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபரை பிடிக்க ஒன்றிய உள்துறைக்கு கடிதம்: போலீஸ் கமிஷனர் அருண் தகவல்
சென்னை: சென்னை, வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் அருண் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மின்னஞ்சல் மூலம் ஒவ்வொரு நாளும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் மிரட்டல் விடுக்கும் போது அதை தீவிரமாக எடுத்துக் கொண்டு அந்த இடத்தில் சோதனை நடத்தப்படுகிறது. கடந்த ஏப்ரல் 29ம் தேதி முதல் நேற்று வரை 342 மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இது தொடர்பாக பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு மற்றும் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்மின்னஞ்சல் நெட்வொர்க் வெளிநாடுகளில் இருப்பதால் சம்பந்தப்பட்ட நபரை பிடிக்க ஒன்றிய உள்துறைக்கு சென்னை காவல் துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தூதரகம் மற்றும் அதில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும் மிரட்டல் வந்துள்ளது. இது தொடர்பாக தூதரக மூத்த அதிகாரிகள் பாதுகாப்பு குறித்து புகார் அளித்தனர். அந்த புகாரின் படி அவர்களுக்கு உரிய விளக்கமும் பாதுகாப்பும் உறுதி செய்துள்ளோம். இதுபோன்ற மிரட்டல்கள் சென்னை மட்டுமல்ல இந்தியா முழுவதும் பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
