மும்பை: ‘ஹாப்பி நியூ இயர்’ போன்ற பிரமாண்ட வெற்றிப் படங்களை இயக்கிய பாரா கான், தனது மூன்று குழந்தைகளின் கல்லூரிப் படிப்புச் செலவை சமாளிப்பதற்காக கடந்த 2024ம் ஆண்டு சமையல் குறிப்புகள் அடங்கிய யூடியூப் சேனலைத் தொடங்கினார். இந்நிலையில், நடிகை சோஹா அலி கானுடனான உரையாடலின் போது தனது வருமானம் குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார். அப்போது அவர், ‘எனது மொத்த சினிமா வாழ்க்கையில் சம்பாதித்ததை விட, இந்த ஒரு வருடத்தில் யூடியூப் மூலம் மிகப்பெரிய தொகையைச் சம்பாதித்து விட்டேன். ஓடிடி மற்றும் தொலைக்காட்சிகளில் இல்லாத சுதந்திரம் இங்கு இருக்கிறது.
எனக்கு விருப்பமானவர்களிடம் பேசவும் முடிகிறது. இந்த யூடியூப் சேனல் மூலம் தானும் எனது நீண்டகால சமையல்காரர் திலீப்பும் பிரபலமடைந்துள்ளோம். யூடியூப் வருமானத்தைக் கொண்டு திலீப்பின் முழுக் கடனையும் அடைத்துவிட்டேன்; ஷாருக்கானுடன் இணைந்து விளம்பரத்தில் நடிக்கும் அளவிற்கு அவர் உயர்ந்துவிட்டார்; அவருக்கு இலவசமாக வீடு கட்டிக்கொடுக்கவும் விளம்பர நிறுவனங்களுடன் பேசி வருகிறேன்’ என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். தற்போது சுமார் 30 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டுள்ள இவரது சேனலில் வெளியாகும் வீடியோக்கள் மூலம் கிடைக்கும் வருமானம் மிகவும் அதிகம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


