நெல்லை: நெல்லை மாவட்டம் பணகுடி அருகே தண்டையார்குளத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவர் கடந்த 2002-ம் ஆண்டு சென்னையில் சினிமா துறை கேண்டினில் சப்ளையராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது சினிமா துணை நடிகரான தினேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் வாயிலாக கருணாநிதி தனது மனைவியான நித்தியகல்யாணிக்கு வேலை தேடிவந்துள்ளார். இதனை அறிந்த தினேஷ் தனக்கு தெரிந்தவர்கள் மூலமாக மின்வாரியத்தில் வேலை வாங்கிதருவதாக கூறியுள்ளார். இதற்கு ரூ.10 லட்சம் செலவாகும் எனவும் கூறியுள்ளார். அதற்கு முன்பணமாக ரூ.3 லட்சம் தர வேண்டும் என கேட்டுள்ளார்.
அதன்படி கருணாநிதி 2002-ம் ஆண்டு பணகுடி அருகே அவரது சொந்த ஊரான தண்டையார்குளத்தில் வைத்து ரூ.3 லட்சம் பணத்தை சினிமா துணை நடிகர் தினேஷ் இடம் கொடுத்துள்ளார். பணம் கொடுத்து பல நாட்கள் ஆகியும் வேலை வாங்கி கொடுக்காததால் கருணாநிதி, அது தொடர்பாக தினேஷ் இடம் கேட்டுள்ளார். அவர் வேலை வாங்கி கொடுக்காமலும், பணத்தை திருப்பு தராமலும் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்கள் முன்பு வள்ளியூருக்கு தினேஷ் வந்திருப்பதை அறிந்த கருணாநிதி தினேஷ்-ஐ செல்போனில் அழைத்து பணத்தி திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அப்போது ஊருக்கு வெளிப்புறமாக வரும்படி அழைத்துள்ளார். அங்கு வந்த கருணாநிதியை தினேஷ் தாக்கிதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக கருணாநிதி பணகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் இன்று(13-11-2025) தினேஷ்-ஐ பணகுடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
