சின்சினாட்டி: சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் நேற்று, ரஷ்ய வீராங்கனை வெரோனிகா குதர்மெடோவா அபார வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில், சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்றுப் போட்டி ஒன்றில் ரஷ்ய வீராங்கனை வெரோனிகா குதர்மெடோவா (28), நெதர்லாந்து வீராங்கனை சூசன் லாமென்ஸ் (26) மோதினர். முதல் செட்டை எவ்வித சிரமமுமின்றி 6-1 என்ற புள்ளிக் கணக்கில் வெரோனிகா கைப்பற்றினார்.
தொடர்ந்து நடந்த 2வது செட்டையும், 6-3 என்ற புள்ளிக் கணக்கில் அவரே வசப்படுத்தினார். இதன் மூலம் நேர் செட் கணக்கில் போட்டியில் வென்ற அவர் 2வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு முதல் சுற்றுப் போட்டியில் அமெரிக்காவின் கேதரின் மெக்னல்லி (23), ஆஸ்திரேலியா வீராங்கனை மேடிசன் இங்லீஸ் (27) உடன் மோதினார். துவக்கம் முதல் துடிப்புடன் செயல்பட்ட கேதரின் 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.