சின்சினாட்டி: அமெரிக்காவின் ஒஹியோ அரசில் உள்ள சின்சினாட்டியில் வெஸ்ட்ர்ன் அண்ட் சதர்ன் ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று காலிறுதிக்கு முந்தைய 4வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர்(23வயது, 1வது ரேங்க்), பிரான்சின் அட்ரியன் மன்னாரினோ(37வயது, 89வது ரேங்க்) ஆகியோர் மோதினர். அதில் ஒரு மணி 48நிமிடங்கள் நீண்ட ஆட்டத்தின் முடிவில் சின்னர் 6-4, 7-6(7-4) என்ற நேர் செட்களில் வென்று முதல் வீரராக காலிறுதிக்குள் நுழைந்தார்.
அதேபோல் மற்றொரு ஆட்டத்தின் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ்(22வயது, 2வது ரேங்க்), இத்தாலியின் லுகா நார்டி(22வயது, 98வது ரேங்க்) ஆகியோர் களம் கண்டனர். அதில் கார்லோஸ் ஒரு மணி 20நிமிடங்களில் 6-1, 6-4 என நேர் செட்களில் வெற்றிப் பெற்று காலிறுதிக்கு முன்னேறினாரர்.
தகுதிச் சுற்று மூலம் முதன்மை சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெற்ற பிரான்ஸ் வீரர் டெரென்ஸ் அத்மன்(23வயது, 136வது ரேங்க்) 4வது சுற்றில் களமிறங்கினார். அதில் ஒரு மணி 59நிமிடங்கள் போராடி 3-6, 7-5, 6-3 என்ற செட்களில் முன்னணி வீரர் அமெரிக்காவின டெய்லர் ஃப்ரிட்சை(27வயது, 4வது ரேஙக்) வென்றார். ஏடிபி டென்னிஸ் போட்டிகளில் கடந்த 9 மாதங்களாக விளையாடி வரும் டெரென்ஸ் முதல் முறையாக காலிறுதிக்கு முன்னேறி உள்ளார்.