Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நாள்பட்ட சர்க்கரை நோயால் ஆறாத ரணம் அலட்சியம் காட்டாமல் மருத்துவரை அணுகினால் குணப்படுத்தலாம்

*திருப்பூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஆலோசனை

திருப்பூர் : சர்க்கரை நோய் பாதிப்புகள் கால் நரம்புகளில் உணர்ச்சி இழப்பை ஏற்படுத்துவதன் மூலம் கால் இழப்பை ஏற்படுத்தக்கூடும்.

இதனை தவிர்க்கவும், ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை அளிக்கக் கூடிய வகையில் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதம் பாதுகாப்பு மையம் செயல்பட்டு வருகிறது இந்தியாவில் நாளுக்கு நாள் சர்க்கரை நோய் பாதிப்புக்கு உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

வயது வித்தியாசம் இல்லாமல் குழந்தைகள் முதலே பாதிக்கப்படக் கூடியவர்கள் அதிகரித்து வருகின்றனர். மனிதர்களில் தலை முதல் கால் வரை எல்லா உறுப்புகளையும் பாதிக்கக் கூடிய நோயாக சர்க்கரை நோய் இருந்து வருகிறது.

கண் விழித்திரை பாதிப்பு, இதய ரத்த குழாய்களை பாதித்து மாரடைப்பு, சிறுநீரக குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்தி சிறுநீரகத்தை செயலிழக்க செய்வது, காலில் புண் உருவாக்கி அதன் மூலம் காலை அகற்றுவது வரை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

மற்ற நோய்களைப் போல சர்க்கரை நோயை அறிகுறிகளைக் கொண்டு கண்டுபிடிக்க முயல்வது அசாதாரணமானது. சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நரம்பு செயல் இழப்பு ஏற்படுகிறது. இதனால் பாதங்களில் ஏற்படும் காயம் குறித்த உணர்வு அவர்களுக்கு இல்லாமல் போகிறது. இந்த பாதிப்பு நாளடைவில் காலை இழக்க செய்கிறது.

இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு காலை இழக்க கூடியவர்கள் எண்ணிக்கை வருடம் தோறும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனைத் தவிர்க்க திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துவங்கப்பட்டுள்ள பாதம் பாதுகாப்பு மையத்தில் மருத்துவ ஆலோசனை மட்டுமல்லாது அதற்குண்டான சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த வாரம் பாதம் பாதுகாப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகவே பாதங்களில் ஏற்படும் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நாளுக்கு நாள் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரக்கூடிய நிலையில் தனி பிரிவாக தொடங்கப்பட்டுள்ளது.

இதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சர்க்கரை நோயால் பாதங்களில் ஏற்படும் காயத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைக்கான இயந்திரங்களுடன் செயல்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு சுமார் 10 பேர் வரை பாதங்களில் ஏற்படும் காயத்திற்காக இம்மையங்களில் சிகிச்சை பெற்று வரக்கூடிய நிலையில் பாதிப்பு அதிகமாக உணரக்கூடியவர்களை உடனடியாக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது.

பாதத்தில் ஏற்படுகின்ற காயம் மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஆனால் இது குறித்த விழிப்புணர்வு இல்லாததால் முற்றிய நிலையில் வரும் நோயாளிகளுக்கு கால்களை அகற்றக் கூடிய நிலை ஏற்படுகிறது. இதனை தவிர்க்க முன்கூட்டியே மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று சிகிச்சை முறைகளை பின்பற்றுவதன் மூலம் தவிர்க்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பொது அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் உமா மகேஸ்வரி மற்றும் தலைமை மருத்துவர் குணாள சுரேஷ் ஆகியோர் கூறுகையில், திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கல்லூரி முதல்வர் பத்மினி மேற்பார்வையில் பாதம் பாதுகாப்பு மையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு பாதத்தில் ஏற்படக்கூடிய காயங்களுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. பெரும்பாலும் சர்க்கரை நோயால் பாதிக்கப்படக்கூடியவர்களின் பாதங்களில் ஏற்படும் காயம் குறித்து பாதிக்கப்படுபவர்களே அறிந்து கொள்வதில்லை.

இதற்கு காரணம் சர்க்கரை நோய் அவர்களின் கால் நரம்புகளில் உணர்ச்சிகளை இழக்க செய்கிறது. இதனால் பாதத்தில் ஏற்படுகின்ற காயத்தால் வலி போன்ற உணர்வுகள் தெரியாது.

ஆனால் இது நாளடைவில் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே பாதத்தில் காயம் இருப்பதை கண்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். வருமுன் காப்போம், பாதத்தினை பாதுகாப்போம் என்ற அடிப்படையில் சிகிச்சை முறைகள் வழங்கப்பட்டு வருகிறது. உடலின் எடை முழுவதும் பாதம் தாங்குவதன் காரணமாக அதீத கவனம் செலுத்த வேண்டி உள்ளது.

ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை பெற அதன் மூலம் பாதத்தில் அணியும் செருப்பு வகைகளை மாற்றம் செய்வது, மருந்து மாத்திரைகள் மற்றும் உணவு கட்டுப்பாடுகளுடன் இதனை குணப்படுத்த முடியும். நாள்பட்ட காயமாக உருமாற்றம் பெற்ற பிறகு அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். இதற்கு பாதிக்கப்பட்டவர்கள் ஒத்துழைப்பு வழங்குவது மிக அவசியம். என தெரிவித்தனர்.

பொருளாதார சூழல்

திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பாதம் பாதுகாப்பு மையத்திற்கு சிகிச்சைக்காக வரும் பெரும்பாலானோர் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட வேண்டி உள்ளது.

ஆனால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் போது குறைந்தபட்சம் ஒரு வார காலம் எடுத்துக் கொள்ளக் கூடும் என்பதால் அந்நாட்களில் பணிக்கு செல்ல முடியாது என பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு சிகிச்சை பெற்றுக் கொள்ளாமல் செல்கின்றனர்.

நாளடைவில் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே மருத்துவர்கள் அறிவுறுத்தப்படும்போதே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தங்கி மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்றால் விரைவில் அவை குணமாகும். இதனை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.