Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குரோம்பேட்டையில் நீதிமன்ற உத்தரவுபடி திருச்சபையை இடிக்க வந்த அதிகாரிகள்: பொதுமக்கள் எதிர்ப்பால் பரபரப்பு

தாம்பரம்: குரோம்பேட்டையில் நீதிமன்ற உத்தரவுபடி திருச்சபையை இடிக்க வந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பு நிலவியது. குரோம்பேட்டை ராஜேந்திர பிரசாத் சாலையில், அண்ணாநகர் பகுதியில் இந்திய சுவிசேஷ திருச்சபை உள்ளது. 60 ஆண்டுகள் பழமையான இந்த திருச்சபையின் கட்டிடம் அனுமதி பெறாமல் சட்டத்துக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ளதாகவும், இந்த இடம் தன்னுடையது எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2023ம் ஆண்டு விஜயா என்பவர், வழக்கு தொடர்ந்தார். இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட திருச்சபையை இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து திருச்சபையை சேர்ந்தவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

ஆனால், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பில் தலையிட முடியாது என கூறி உச்சநீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து மீண்டும் வேலுமணி மற்றும் லஷ்மிநாராயணன் ஆகியோர் கொண்ட அமர்வு திருச்சபையை இடிக்க உத்தரவிட்டது. அதன்படி இன்று காலை தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் மேற்பார்வையில், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் உத்தரவுபடி துணை ஆணையர், உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், போக்குவரத்து போலீசார் உட்பட 200க்கும் மேற்பட்ட போலீசார் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருப்பதற்கு சுவிசேஷ திருச்சபை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் பொக்லைன் இயந்திரத்துடன் சம்பந்தப்பட்ட இடத்துக்கு வந்து திருச்சபையை இடிக்க தயார் நிலையில் இருந்தனர். இதையறிந்த திருச்சபையை சேர்ந்தவர்கள், அப்பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசிகள், வியாபாரிகள் மற்றும் அனைத்து கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோருடன் திரண்டு திருச்சபையை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பகுதி மக்களுடன் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் குரோம்பேட்டையில் பதற்றம் நிலவியது.