லாஸ்ஏஞ்சல்ஸ்: அடுத்த ஆண்டு திரைக்கு வரும் கிறிஸ்டோபர் நோலனின் படத்துக்கான டிக்கெட்டுகள் இப்போதே விற்றுத் தீர்ந்துள்ளன. அமெரிக்காவின் முதல் அணுசக்தி ஆயுதத்தை உருவாக்கிய அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானி ஜே.ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் வாழ்க்கை சம்பவங்களை மையமாக வைத்து ‘ஓப்பன்ஹெய்மர்’ என்ற படத்தை இயக்கியவர், கிறிஸ்டோபர் நோலன். அவரது `இன்டர்ஸ்டெல்லர்’, `இன்செப்ஷன்’, `டெனட்’ ஆகிய படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். `தி டார்க் நைட் டிரைலாஜி’, `தி பிரஸ்டீஜ்’ ஆகிய படங்களையும் இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
டிஜிட்டல், 3டி, கிராபிக்ஸ் போன்ற அதீத தொழில்நுட்பங்களை விரும்பாத அவர், `இன்செப்ஷன்’ படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தை மீண்டும் 3டியில் ரிலீஸ் செய்ய கேட்டபோது மறுத்துவிட்டார். இந்நிலையில், கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் அடுத்த வருடம் ஜூலை 17ம் திரைக்கு வரும் படம், ‘தி ஒடிஸி’. மெட் டாமன் ஹீரோவாக நடித்துள்ள இப்படம் திரைக்கு வரவிருக்கும் நிலையில், அதன் டிக்கெட்டுகள் இப்போதே விற்று தீர்ந்துவிட்டது. இதுவரை ஒரு வருடத்துக்கு முன்பாக எந்த படத்துக்கும் டிக்கெட் ரிசர்வேஷன் நடந்தது கிடையாது. முதல் முறையாக இந்த படத்துக்கு தான் இதுபோல் நடந்துள்ளது. இதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதல் ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் அமெரிக்காவிலுள்ள முக்கிய தியேட்டர்களில் புக் ஆகியுள்ளது. மேலும் சில நாடுகளிலும் இதுபோன்ற புக்கிங் நடந்திருக்கிறது.
ஹாலிவுட் படம் வெளியாக ஒரு வருடம் இருக்கும் நிலையில், இப்போதே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.