Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
South Rising
search-icon-img
Advertisement

ஸ்டார்கள், குடில்கள் அமைக்கும் பணி தீவிரம்; குமரியில் கிறிஸ்துமஸ் ஏற்பாடுகள் தொடக்கம்: விதவிதமான பொருட்கள் விற்பனைக்கு குவிந்தன

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. ஸ்டார்கள் விற்பனை தீவிரம் அடைந்துள்ளது. இயேசு கிறிஸ்துவின் பிறப்பு உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெறும். இந்த ஆண்டு டிசம்பர் 25ம் தேதி (வியாழன்) கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டத்திலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். இந்தாண்டும் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாட்ட ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. கிறிஸ்துமசையொட்டி கிறிஸ்தவர்களின் வீடுகளிலும், ஆலயங்களிலும் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்படும். இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுப்படுத்தும் வகையில் இந்த குடிலில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அதே போல கிறிஸ்துமஸ் மரம் அமைத்து அதை மின் விளக்குகளால் அலங்கரிப்பார்கள்.

கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மை மற்றும் பரிசு பொருட்கள், பலூன்களை கிறிஸ்துமஸ் மரத்தில் கட்டி தொங்க விடுவார்கள். இதற்காக இப்போதே வீடுகளில் கிறிஸ்துமஸ் குடில், மரம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இயேசு பிறந்த இடத்தை வால் நட்சத்திரம் அடையாளம் காட்டியது. அதை குறிக்கும் வகையில் வீடுகளில் ஸ்டார்கள் தொங்க விடப்படும். இதையொட்டி மாவட்டம் முழுவதும் பல விதமான வண்ணங்களில், வடிவங்களில் ஸ்டார்கள் விற்பனைக்கு வந்துள்ளது. நாகர்கோவிலில் மணிமேடை பகுதி, டதி ஸ்கூல் சந்திப்பு, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை உள்பட பல்வேறு இடங்களில் பலவிதமான ஸ்டார்கள் மும்முரமாக விற்பனையாகிறது. மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி மற்றும் கடலோர பகுதிகளிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கான பொருட்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.

வரும் டிசம்பர் 1ம் தேதியில் இருந்து கிறிஸ்துமஸ் தாத்தா பவனி தொடங்க உள்ளது. இனிமையான பாடல்களை பாடியபடி வீடுகள் தோறும் சென்று கிறிஸ்துமஸ் தாத்தா பரிசு வழங்கி வாழ்த்துக்கள் கூறுவார்கள். கிறிஸ்தவ ஆலயங்களும் அலங்கரிக்கப்படுவதற்கான பணிகள் தொடங்கி இருக்கின்றன. பல கிறிஸ்தவ ஆலயங்களின் கட்டிடங்கள் வண்ணமயமான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டும், ஏராளமான ஸ்டார்களால் தோரணங்கள் தொங்க விடப்படுவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக வெளிநாடுகளில் இருப்பவர்கள் டிசம்பர் முதல் வாரத்தில் இருந்தே சொந்த ஊருக்கு வருவார்கள்.