பீஜிங்: கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவதை தடுக்காவிட்டால் நைஜீரியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த மிரட்டலுக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும், இதை அந்நாட்டு அரசு இனியும் தடுக்கத் தவறினால் நைஜீரியாவுக்கு வழங்கப்படும் அனைத்து உதவிகளும் உடனடியாக நிறுத்தப்படும் என்றும், அங்குள்ள தீவிரவாதிகளை அழிக்க தேவைப்பட்டால் ராணுவ நடவடிக்கையும் எடுக்கக் கூடும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 1ம் தேதி எச்சரிக்கை விடுத்தார்.
டிரம்பின் அச்சுறுத்தல் குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மாவோ நிங் நேற்று அளித்த பேட்டியில், ‘‘அமெரிக்காவின் கருத்துகள் நைஜீரியாவில் தற்போதைய யதார்த்தத்தை பிரதிபலிக்கவில்லை என்றும், தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதற்கும், மதங்களுக்கு இடையேயான நல்லிகணக்கத்தை வலுப்படுத்துவதற்கும், அனைத்து மக்களின் உயிர்களையும், உரிமைகளையும் பாதுகாப்பதற்கும் நைஜீரிய அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. நைஜீரிய அரசு அதன் தேசிய நிலைமைகளுக்கு ஏற்ப வளர்ச்சிப் பாதையை நோக்கி அதன் மக்களை வழிநடத்துவதில் சீனா உறுதியாக ஆதரிக்கிறது. மதம், மனித உரிமைகள் என்ற சாக்கில் மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் எந்தவொரு நாடும் தலையிடுவதை சீனா எதிர்க்கிறது. இதற்காக தடைகள், அச்சுறுத்தல்களையும் தன்னிச்சையாக பயன்படுத்துவதையும் கண்டிக்கிறது’’ என்றார்.
