சென்னை:தமிழ்நாடு அரசால் கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப் பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறிஸ்தவ அனாதை இல்லங்கள், தொழுநோயாளிகள் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர் ஆகியோரின் முன்னேற்றத்திற்காக கிறித்தவ உபதேசியாளர்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்பட்டது.
இந்த வாரியத்தில் தலைவர், துணை தலைவர், 9 அலுவல் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் 16 அலுவல் சாரா உறுப்பினர்களை மூன்று ஆண்டு காலத்திற்கு நியமனம் செய்து 2024ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. இந்த வாரியத்திற்கான அலுவலகத்திற்கு டிஎம்எஸ் வளாகத்தில் புள்ளியியல் கட்டிடத்தின் 3வது தளத்தில் செயல்பட அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று வாரியத்திற்கான அலுவலக கட்டிடத்தை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர் திறந்து வைத்தார். இதில் வாரிய தலைவர் விஜிலா சத்தியானந்த், துணைத்தலைவர் போதகர் ஆர்.தயாநிதி, சிறுபான்மையினர் நல ஆணையர் மு.ஆசியா மரியம் மற்றும் வாரிய அலுவல் சாரா உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.