Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சோழவந்தான் அருகே மழையால் சாய்ந்த நெற்பயிர்கள்

*அறுவடை செய்ய வழியின்றி தவிக்கும் விவசாயிகள்

சோழவந்தான் : சோழவந்தான் அருகே மழையால் நெல்பயிர்கள் சாய்ந்ததால் அறுவடை செய்ய வழியின்றி விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.சோழவந்தான் அருகே கரட்டுப்பட்டி பகுதியில் பெரியார் பாசனக் கால்வாய் மூலம் நெல் விவசாயம் அதிக அளவில் நடைபெறுகிறது.

பல இடங்களில் நெல் அறுவடைப் பணிகளும் நடைபெறுகிறது. இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் நெற் பயிர்கள் பல இடங்களில் சாய்ந்து அறுவடை செய்ய வழியின்றி விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.

இது குறித்து வழக்கறிஞரும், விவசாயியுமான கிருஷ்ணசாமி கூறுகையில், ‘‘எனது வயலில் செல்லப்பொன்னி வகை நெல் பயிரிட்டேன். நடவு முதல் அறுவடை வரை ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவானது.

இதில் களை புற்கள் அதிகம் வளர்ந்ததால் அதை அகற்ற கூடுதல் செலவானது. இவ்வாறு பல தடைகளைத் தாண்டி அறுவடை செய்யும் வேளையில் மழை பெய்ததால் அனைத்து நெல் கதிர்களும் மண்ணோடு மண்ணாக சாய்ந்து விட்டது.

இதை அறுவடை செய்தாலும் பாதி அளவு தான் மகசூல் கிடைக்கும். சாதாரண நேரங்களில் டயர் வண்டி எனும் சாதாரண அறுவடை இயந்திரத்தில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1500 கூலியில் அறுவடை செய்யலாம்.

அதில் கிடைக்கும் வைக்கோலையும் விற்பனை செய்யலாம். ஆனால் இது போல் மழையால் சாய்ந்த கதிர்களை செயின் வண்டி எனும் இயந்திரம் மூலம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.3000 கூலி கொடுத்து அறுவடை செய்ய வேண்டி உள்ளது. இதில் அறுவடை செய்யும் வைக்கோலையும் விற்பனை செய்ய முடியாது.

இதனால் ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் கிடைக்காத பரிதாப சூழல் உள்ளது. இவ்வாறு செலவழித்த தொகைக்கு கூட மகசூல் கிடைக்காமல் இப்பகுதி விவசாயிகள் அதிகம் நஷ்டமடைந்து உள்ளோம். மற்ற தொழில்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமும், லாபமும் ஊருக்கே உணவளிக்கும் விவசாயிகளுக்கு கிடைக்காமல் பரிதவித்து வருகிறோம். வேளாண்மைத் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்றார்.