Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சோழவரம் ஏரி கால்வாயை ஆக்கிரமித்துள்ள ஆகாயதாமரையை அப்புறப்படுத்த வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

புழல்: சோழவரம் ஏரி கால்வாயை ஆக்கிரமித்துள்ள ஆகாயதாமரைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றாக சோழவரம் ஏரி விளங்குகிறது. மழைகாலத்தில் சோழவரம் ஏரி நிரம்பும்போது திறந்துவிடப்படும் உபரிநீர், நல்லூர், விஜயநல்லூர், ஆட்டம் தாங்கல், பாலகணேசன்நகர், எம்ஜிஆர் நகர், ராஜாங்கம் நகர், செங்குன்றம் ஆலமரம் பகுதி கல்வாய் வழியாக 4 கிமீ தூரம் சென்று புழல் ஏரியில் கலக்கிறது. இந்நிலையில் சோழவரம் ஏரி கால்வாயின் இருபுறமும் உள்ள வீடு, கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கால்வாயில் விடப்படுகிறது. கால்வாயில் கழிவுநீர் தேங்கிநிற்பதால் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது.

கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி இரவு நேரங்களில் வீடுகளில் தூங்க முடியாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. மேலும் கால்வாயில் ஆகாயத்தாமரை அதிகளவில் வளர்ந்துள்ளதால் தங்குதடையின்றி தண்ணீர் செல்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. கழிவுநீரால் நிலத்தடிநீர் மாசடைந்து வருகிறது. இதுதொடர்பாக செங்குன்றம் நீர்வளத்துறை அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நட வடிக்கை எடுக்கவில்லை. இதே நிலை நீடித்தால் குடிநீரில் மாசு ஏற்பட்டு புழல் ஏரி நீரும் மாசடைய வாய்ப்புள்ளது. எனவே, கால்வாயில் கழிவுநீர் விடுவதை தடுக்கவேண்டும், அதிகளவில் வளர்ந்துள்ள ஆகாய தாமரையும் அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.