Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சோழவரம் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் 5000 நெல் மூட்டைகள் தேக்கம்: விவசாயிகள் வேதனை

புழல்: சோழவரம் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், 4 நாட்களாக 5000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் குறுவை மற்றும் சம்பா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வரும் நிலையில், சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு, நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள ஈரப்பதத்தில் நெல் கொள்முதலில் ஏற்படும் பிரச்னைகள் தீர்வுகாண வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், சோழவரம் அடுத்த நெடுவரம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த சில நாட்களாக விவசாயிகளிடமிருந்து, நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. அறுவடை செய்யப்பட்டு மூட்டைகளை டிராக்டர்களில் கொண்டு வந்து, ஒரு வார காலமாக காத்திருப்பதாகவும், மழையில் நெல்மணிகள் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகளின் அலட்சியப்போக்கு காரணமாக சுமார் 5000க்கும் மேற்பட்ட மூட்டை நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாகும் அபாயம் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய மறுக்கும் அதிகாரிகள், இரவு நேரங்களில் நெல் வியாபாரிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்து வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக தமிழ்நாடு அரசு தேக்கமடைந்துள்ள நெல்லை கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.