Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரூ.40 கோடியில் சீரமைக்கப்பட்ட சோழவரம் ஏரிக்கரை சாலை விரிசல்: மக்கள் வரிப்பணம் வீண்

புழல்: சோழவரத்தில் ரூ.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் சோழவரம் ஏரிக்கரை சாலை விரிசல் விழுந்து காணப்படுகிறது. இதனால், மக்கள் வரிப்பணம் வீணானது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் சோழவரம் ஏரி மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. 1081 மில்லியன் கன அடி (1.08 டிஎம்சி) கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் மழை நீர் மட்டுமின்றி பூண்டி ஏரியிலிருந்து அனுப்பப்படும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக புழல் ஏரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சோழவரம் ஏரிக்கரை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 3.5 கிமீ நீளம் கொண்ட சோழவரம் ஏரிக்கரையில், முதற்கட்டமாக அதிக பாதிப்புள்ள 1.04 கிமீ தூரத்திற்கு கடந்தாண்டு முதல் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏரிக்கரையில் கான்கிரீட் சுவர், சரிவில் கருங்கல் பாறைகள் பதிக்கப்பட்டு வருகின்றன. கரையின் மேல் பகுதியில் அலை தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு, நீர்வளத்துறை அதிகாரிகள் வாகனங்கள் வந்து செல்ல வசதியாக கரையின் மேல் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் காரணமாக கடந்தாண்டு சோழவரம் ஏரியில் 15 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு வைக்கப்பட்டு, உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது.

முதற்கட்ட சீரமைப்பு பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ள நிலையில் இந்தாண்டு மழைநீர் ஏரியில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் தற்போது 73சதவீம் நிரம்பி 799 மில்லியன் கன அடி (0.8 டிஎம்சி) நீர் இருப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்து சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து ஏரி முழு கொள்ளளவை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சீரமைப்பு பணிகள் நடந்த சோழவரம் ஏரியில் கரைகளில் விரிசல் விழுந்துள்ளது. இதனால், கரையின் உறுதி தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. ஏரியில் அதிகளவு தண்ணீர் தேக்கி வைக்கப்படும் நிலையில் விரிசல் விழுந்துள்ள கரை ஏரியின் முழு கொள்ளளவை தாங்கிடுமா என பொதுமக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். மேலும், ஏரிக்கறையின் மீது ஏற்பட்டுள்ள விரிசலை மணலை கொட்டி சரி செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரையில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் அதனை முறையாக தோண்டி எடுத்து சீரமைக்காமல் அப்படியே மணலை கொட்டி மூடும் செயல் கண்டனத்திற்கு உரியது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், முறையற்ற வகையில் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவர் என அலட்சியமாக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக புகார் தெரிவிக்கின்றனர். சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கிடும் பிரதான ஏரிகளில் ஒன்றான சோழவரம் ஏரியை முறையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாததால் புதர் மண்டி காட்சி அளிப்பதாக தெரிவித்தனர். அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மக்களின் வரிப்பணத்தை வீணடிக்காத வகையில் சோழவரம் ஏரியை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து கரையினை உறுதிப்படுத்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.