Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சோழவந்தான் அருகே திருவேடகத்தில் நடந்த ஏடு எதிரேறிய விழா

*திளரான பக்தர்கள் பங்கேற்பு

சோழவந்தான் : சோழவந்தாமன் அருகே திருவேடகத்தில் உள்ள ஏடகநாதர் கோயிலில், நேற்று வைகை ஆற்றில் ஏடு எதிரேறிய விழா சிறப்பாக நடைபெற்றது. சோழவந்தான் அருகே திருவேடகத்தில் ஏழவார் குழலி சமேத ஏடகநாதர் திருக்கோயில் உள்ளது. ஸ்தலம், தீர்த்தம், மூர்த்தி என மூன்றும் ஒன்றுசேரக் கொண்டதான வரலாற்று சிறப்பு மிக்க இந்த சிவாலயத்தில் திருப்பாசுர ஏடு எதிரேறிய விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.

கி.பி 7ம் நூற்றாண்டில் சைவ சமயத்தைக் காக்கவும், மதுரையை ஆண்ட கூன்பாண்டியன் எனும் மன்னரின் வெப்பு நோய் நீங்கவும், திருஞான சம்பந்தர், சமணர்களுடன் ‘அனல் வாதம்’ எனும் சொற்போர் நிகழ்த்தி திருப்பாசுரம் பாடினார். மேலும் புனல் வாதம் புரிய ‘வாழ்க அந்தணர்’ எனும் திருப்பாசுர ஏட்டினை வைகை ஆற்றில் விட்டார்.

இதன்படி மதுரையில் விடப்பட்ட அந்த ஏடு ஆற்றில் எதிர் திசையில் நீந்தி திருவேடகத்தில் நின்று வாதத்தில் வென்றது. இதனால் இவ்வூருக்கு திரு ஏடகம் என பெயராகி பின் அது மருவி திருவேடகம் என வந்தது. அந்த நிகழ்வை போற்றும் விதமாக ஆண்டு தோறும் ஆவணி பௌர்ணமி அன்று திருப்பாசுர ஏடு எதிரேறிய விழா நடைபெறுவது வழக்கம். இதன்படி நேற்று காலை நடைபெற்ற விழாவில் கோயிலில் நாயன்மார்களுக்கு அர்ச்சகர் பரசுராமன் குழுவினரால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

பின்னர் விநாயகர், கையில் ஏடு ஏந்திய திருஞான சம்பந்தர், குலச்சிறை நாயனார் ஆகியோர் கோயிலில் இருந்து ஊர்வலமாக சென்று வைகை ஆற்றில் எழுந்தருளினர். இதையடுத்து காலை 11 மணியளவில் சிவனடியார்கள் திருப்பாசுரங்கள் பாட, தங்க முலாம் பூசப்பட்ட ஏடு, அதற்குரிய தனி சப்பரத்தில் வைத்து வைகையாற்றுத் தண்ணீரில் விடப்பட்டது. ஆண்டு தோறும் இரவில் நடைபெறும் இவ்விழா சந்திர கிரகணத்தால், நேற்று காலையில் நடத்தப்பட்டு மதியம் 12 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது.

தமிழக அளவில் இந்த ஒரு கோயிலில் மட்டுமே இவ்விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை தக்கார் சேவுகன், செயல் அலுவலர் சரவணன் மற்றும் கோயில் பணியாளர்கள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.