நம்முடைய உறுதியான நம்பிக்கையான சிந்தனைதான் செயலாக மலர்ந்து நம்மைப் பெருமைப்படுத்துகிறது. எனவே எதைச்சிந்தித்தாலும் நுட்பமாக சிந்திக்க பழகிக் கொண்டால் தான் வாழ்வில் நாம் விரும்பும் முடிவுகளை ஒவ்வொரு முறையும் குறி தவறாது வீசி பிடிக்க முடியும்.உங்கள் இலட்சியங்களை கற்பனை சக்தியின் மூலம் எவ்வளவு வேண்டுமானாலும் சிந்தித்து மனதால் ஒரு உயர்ந்த வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ளலாம்.அதே நேரத்தில் அந்த உயர்வை அடைய அறிவைப் பயன்படுத்தி ஒவ்வொரு அடியாக முயற்சி செய்கிறீர்கள் என்றால் நீங்கள் உண்மையில் நுட்பமாக சிந்திக்கும் மனிதர்தான்.
ஏனென்றால் உணர்ச்சி வசப்படாமல் அறிவின் வழியே தொடர்ந்து செல்ல உறுதி கொள்ளும் நீங்கள், வழியில் ஏதேனும் தடைகள் ஏற்பட்டால் அவற்றைச் சமாளிக்க தேவையான புதிய வழி, பொருளாதார பாதுகாப்பு போன்றவைகளும் உங்களிடம் முன்கூட்டியே திட்டமிட்டு ரெடியாகவும் இருக்க வேண்டும்.இந்த குணங்கள் இல்லையெனில் ஒவ்வொருவரும் இதை வளர்த்துக் கொள்ள வேண்டும். கோல்ப் விளையாட்டு வீரர்களும், கேரம்போர்ட்டில் விளையாடுபவர்களும் தங்கள் கற்பனையில் விளையாடிப்பார்த்து பிறகு நன்கு உறுதி செய்து கொண்டு விளையாடி பந்தையும், காயையும் குழிக்குள் தள்ளி விடுகின்றனர்.
ஒவ்வொரு முறையும் நுட்பமாகச்சிந்தித்து தான் இந்த இரு விளையாட்டு வீரர்களும் விளையாடுகிறார்கள்.நம்முடைய வாழ்க்கையிலும் மிகப்பெரிய இலட்சியமாக இருந்தாலும் சரி, எதிரில் குறுக்கிடும் தடைகளாக இருந்தாலும் சரி, இந்த விளையாட்டு வீரர்களை போலத்தான் கற்பனையில் சிந்தித்து விரும்பும் முடிவை அடைய அறிவின் வழியே முயற்சி செய்ய வேண்டும்.கற்பனையில் நாம் விரும்பும் முடிவை காணும்போதே அதை அடைவதற்கான வழியை நுட்பமாக சிந்தித்தால் போதும், அப்போது தோன்றும் புதிய சிந்தனைகளும், புதிய வழிகளும் கற்பனையில் நாம் விரும்பிய முழுமையான வெற்றியை நிஜத்தில் பெற்று தரும்.இந்த வழியில் முயற்சித்து வெற்றி பெற்ற தொழில் முனைவர் ஒருவரை உங்களுக்கு அறிமுகம் செய்யப் போகிறேன்.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்வீட் மீதான ஆசை இருந்தாலும் நாவினைக் கட்டுப்படுத்தி ஆசையினை துறந்துவிடுகின்றனர். உண்மையில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இனிப்பு பண்டங்களே உண்ணக் கூடாது என்பதில்லை.அதனை முறையாகவும் ஆரோக்கியமான வழியிலும் உட்கொள்ள வேண்டும்.அந்த வழிகளை சிறு வயதிலிருந்தே தேட தொடங்கினார் ப்ரியாஷா சலுஜா.ஏனெனில் 13 வயதிலே பிசிஓஎஸ்ஸால் பாதிக்கப்பட்ட அவருக்கு பல உணவுக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஓர் உணவுப் பிரியராக பல சந்தர்ப்பங்களில் வாய்க்கட்டு போடுவது அவருக்கு கடினமாகவே இருந்துள்ளது.
தனது பிரச்னைக்கான தீர்வின் தேடலில் இறங்கிய ப்ரியாஷா, இறுதியில் ஹெல்தியான ஸ்னாக்ஸ்களை அவரே செய்யத் தொடங்கி, வெற்றிகரமான தி சினமன் கிச்சன் எனும் பிராண்டையும் தொடங்கி வெற்றிகரமான தொழில் முனைவோராக சாதித்து வருகிறார்.சினமன் கிச்சனானது 100 சதவீதம், குளுட்டன் ப்ரீ, பதப்படுத்தும் பொருட்கள் இல்லாமல். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை சேர்க்காமல் மற்றும் மைதா மாவு பயன்படுத்தாமல், தாவர அடிப்படையிலான மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கும் உணவுப்பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்கிறது. டெல்லியை தளமாகக் கொண்ட பிராண்ட் குக்கீகள், சிப்ஸ், கேக்குகள், ரொட்டி மற்றும் பல தயாரிப்புகளையும் தயாரித்து வழங்குகிறது.
நொய்டாவைச் சேர்ந்த பிரியாஷா, டெல்லி பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை பட்டம் முடித்துள்ளார். பட்டம் பெற்ற பிறகு, PwC நிறுவனத்தில் வரிவிதிப்புத் துறையில் பணிக்கு சேர்ந்தார். பின், அவர் மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரத்தில் ஈடுபட முடிவு செய்தார். பார்லே, மற்றும் ஐடிசி போன்றபிராண்டுகளில் பணிபுரிந்தார். புரபஷன் ஒரு புறமிருக்க, அவரது உடல்நிலையினை பாதிக்காத உணவுப் பண்டங்களை செய்து நாவிற்கு விருந்தளிக்கும் அவரது குக்கிங் பேஷனும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருந்தது. பள்ளிப் படிப்பை மேற்கொண்டிருந்த போது, அவருடைய தோழியின் பிறந்தநாளுக்கு அவரே கேக் செய்துள்ளார். ஆனால், அது சொதப்பலில்முடிந்தது. அப்போதிருந்தே கிச்சன் பக்கம் அவர் அடிக்கடி செல்வதுண்டு.
குடும்பத்தில் இருந்த அனைவருமே குக்கிங் எக்ஸ்பேர்ட்களாக இருந்ததால், ப்ரியாஷாவிற்கு புதிய ரெசிபிக்களை அதிலும், டேசர்ட் அயிட்டங்களை தயாரிக்கும் ஆர்வம் அதிகரித்தது. நொறுக்கு அயிட்டங்களில் தொடங்கி பேக்கிங் வரை சென்றது அவரது குக்கிங் பயணம்.அதன் நீட்சியாய் பிசிஓஎஸ்ஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஸ்பெஷல் ரெசிபிக்களை ஆவணப்படுத்தும் நோக்கிலும், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் எண்ணத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரெசிபி வீடியோக்களை அப்லோடு தொடங்கியுள்ளார். காலப்போக்கில் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து, ரெசிபிக்களுக்கான வரவேற்புகளும் குவிந்தது.2019-ம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த ஒரு உணவு பிராண்ட் ப்ரியாஷாவின் ரெசிபி வீடியோக்களால் ஈர்க்கப்பட்டு, அவர்களது நிகழ்ச்சி ஒன்றில் ஃபுட் ஸ்டாலை வைக்க அவருக்கு அழைப்பு விடுத்தது. எதிர்பாரா அழைப்பால் திகைத்த ப்ரியாஷா, அவரது பிராண்டிற்கென ஒரு லோகோவை உருவாக்கி, ஸ்டாலில் என்னென்ன இனிப்பு தின்பண்டங்களை விற்கலாம் என்பதற்கான மெனுவினையும் வடிவமைத்தார். அந்நிகழ்வில் அவருக்கு அளவுகடந்த வரவேற்பு கிடைத்தது. விளைவாய் அவரது பணியை துறந்து தொழில்முனைவு பயணத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். அங்கிருந்து தொடங்கியது“தி சினமன் கிச்சனின்” பயணம்.
உண்மையில் மக்கள் ஆரோக்கியமாக சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுக்கு தின்பண்டங்களைத் தயாரிக்க நேரமும் விருப்பமும் இல்லை. இதுவே சொந்த நிறுவனமான தி சினமன் கிச்சனைத் தொடங்கத் துாண்டியது. இனிப்புகளின் மீதிருந்த காதல், அதை தொழிலாக தொடங்க வைத்தது” என்று பகிர்ந்தார் ப்ரியாஷா.வெறும் 50,000 ரூபாய் முதலீட்டில் அவரது நிறுவனத்தை வீட்டு சமையலறையிருந்து தொடங்கினார்.ஆரம்பத்தில் நட் பட்டர், ஃபட்ஜ், மைதா மாவு இல்லாத பாதாம் குக்கீகள், எனர்ஜி பைட்ஸ், ரொட்டி போன்ற பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளை விற்பனை செய்துள்ளார். 2 மாதங்கள் மட்டும் கெட்டு போகாமலிருக்கும் அத்தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் மீண்டும் வாங்குவதற்கு 3 தினங்கள்காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தாமதம் அவர்கள் மீண்டும் வாங்கும் விகிதத்தை பாதித்தது.
நிறுவனம் தொடங்கிய முதல் ஆண்டிலே ரூ.1,40,000 விற்பனையை பதிவு செய்தது. அதற்கு அடுத்த ஆண்டுக்கு ரூ.12,50,000 வரை வருவாய் ஈட்டியுள்ளது. நிகழும் நிதியாண்டில் ரூ.6 கோடி விற்பனையை நிறுவனம் எதிர்நோக்கி காத்திருக்கிறது.இந்நிறுவனம் 80% பெண் பணியாளர்களைக் கொண்டு இயங்குகிறது. கூடுதலாக, பெண் தொழில்முனைவோர்களை உருவாக்கும் நோக்கத்துடன், வொர்க்ஷாப்களையும் நடத்தி வருகிறார்.இல்லத்தரசிகள் பலரும் ஆர்வமாக கலந்து கொள்ளும் 3 மணி நேர வொர்க் ஷாப்பினை ரூ1750 கட்டணத்தில் கற்றுக் கொடுக்கிறார்.தி சினமன் கிச்சனானது அதன் இணையதளம் மற்றும் அமேசான், பிளிங்கிட், லீ மார்சி ஆகிய இ-காமர்ஸ் தளங்கள் வழியே அதன் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. மேலும், தயாரிப்புகள் க்ரீனர், நேச்சர்ஸ் சோல் மற்றும் பல ஆஃப்லைன் கடைகளிலும் கிடைக்கிறது.இவரைப் போல தொழில் முனைவராக வேண்டும் என்ற இலக்கை தீர்மானித்த பிறகு அச்சப்பட்டு திரும்ப செல்வது என்ற எண்ணமே நமக்குள் இருக்கக்கூடாது அச்சத்தை விரட்டி அடித்தவர்கள் மட்டுமே ஒரு சிறந்த தொழில் முனைவராக உருவாகி உள்ளார்கள். உழைப்பையும் முயற்சியும் இணைத்துக்கொண்டு வாழ்க்கையின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை நாமே உருவாக்கிக் கொண்டு வெற்றி பெறுவோம்.



