Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சித்தூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா இருப்பு

*ஆய்வு செய்த கலெக்டர் பேட்டி

சித்தூர் : சித்தூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா இருப்பு உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். சித்தூர் மாவட்டம், பலமனேர், புங்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் யூரியா விநியோகத்தை கலெக்டர் சுமித்குமார் நேற்று அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். அதன்பின்னர் நிருபர்களிடம் கலெக்டர் கூறியதாவது:

சித்தூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா இருப்பு உள்ளது. இது இன்னும் 2 மாதங்களுக்கு தேவையான இருப்பு ஆகும். மாநில அரசின் உத்தரவின்படி மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.கே.க்கள் மூலம் யூரியா விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன்ஒரு பகுதியாக பலமனேர் தொகுதி, பெத்தபஞ்சனி மண்டலம், வீரப்பள்ளி கிராமத்தில் ரைத்து சேவா கேந்திராவில் விநியோகம் செய்யப்படும் யூரியா உரத்தை ஆய்வு செய்து, விவசாயிகளின் குறைகள் கேட்டறியப்பட்டது.

அதேபோல், புங்கனூரில் உள்ள ஆர்.எஸ்.கே.க்கள் மற்றும் சங்கங்களில் யூரியா விநியோகம் குறித்த ஆய்வு நடந்தது. ஆர்.எஸ்.கே.க்கள் மூலம் விவசாயிகளுக்கு ஒரு மூட்டை யூரியா விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 18 ஆயிரம் விவசாயிகளுக்கு 1,500 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. பலமனேர் மற்றும் புங்கனூர் தொகுதிகளில் நெல் சாகுபடி அதிகமாக உள்ளது.

இதனால் கூடுதல் மூட்டை யூரியா தேவைப்படுவதால், விவசாயிகளுக்கு வரும் 14ம் தேதி முதல், 16ம் தேதி வரை மற்றொரு மூட்டை யூரியா விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த ஆண்டு 45 ஆயிரம் ஹெக்டேரில் பயிர் சாகுபடி செய்யப்பட்டது. இதற்காக 15 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா விநியோகிக்கப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை 13 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா விநியோகிக்கப்பட்டுள்ளது. இதுகடந்த ஆண்டு சராசரி விநியோகத்தை விட அதிகமாகும்.

இ-கே.ஒய்.சி மற்றும் பயோமெட்ரிக், டி.பி.டி முறை மூலம் ஆர்.எஸ்.கே.க்களில் யூரியா வெளிப்படையாக விநியோகிக்கப்படுகிறது. யூரியாவுடன் நானோ யூரியாவையும் பயன்படுத்தலாம் என்பது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தேவைப்படும் இடங்களில் 20 நாட்களுக்குப் பிறகு மற்றொரு தவணை விநியோகிக்கப்படும். தேவையான அளவு மட்டுமே யூரியாவைப் பயன்படுத்த வேண்டும். யூரியாவைப் பயன்படுத்தி வளர்க்கப்படும் உணவை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஆகவே விவசாயிகள் யூரியா பயன்பாட்டை படிப்படியாக குறைத்து, இயற்கை உரத்தை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் வேளாண் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.