*அணிவகுத்து நின்ற வாகனங்கள், போக்குவரத்து பாதிப்பு
சின்னசேலம் : கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உட்பட்ட சின்னசேலத்தில் பெரிய ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தின் ஒருபுறம் உள்ள கூகையூர் சாலையிலும், மற்றொரு புறம் நைனார்பாளையம் சாலையிலும் ஒரு ரயில்வே கேட்டும் உள்ளது. இந்த இரண்டு ஊர்களுக்கும் செல்பவர்கள் ரயில் வரும் நேரத்தில் நின்று செல்லும் வகையில் ரயில்வே கேட் மூடப்படுவதும், ரயில் சென்ற பிறகு திறந்துவிடுவதும் வழக்கம்.
இந்த ரயில்வே கேட் மூடுவதும், திறப்பதும் மின்சாரம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை 11.50 மணியளவில் விருத்தாசலம் டூ சேலம் ரயில் அந்த கேட்டை கடந்து சென்றது. அப்போது ரயில் வருவதை ஒட்டி மூடப்பட்ட ரயில்வே கேட், சிக்னல் பழுதானதால் மீண்டும் திறக்க முடியவில்லை.
இதனால் ரயில் வருவதை ஒட்டி இருபுறமும் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து தடை ஏற்பட்டது. இந்த சிக்னல் பழுது சுமார் 30 நிமிடமாக நீடித்தது. இதனையடுத்து ரயில்வே ஊழியர்கள் கையால் இயக்கி கேட்டை திறந்தனர். இதனால் சாலையின் இருபுறமும் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றது.

