சின்னமனூர் : சின்னமனூர் பகுதியில், முதல் போக சாகுபடிக்கு நெல் நடவுப் பணிகள் நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது. இதற்கிடையே களை பறிக்கும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் பாசன நீரைப் பயன்படுத்தி சுமார் 14,700 ஏக்கர் பரப்பில் இருபோகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் சின்னமனூர் மற்றும் சுற்றுப் பகுதியில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி நடைபெறுகிறது.
பெரியாறு அணை நீர்மட்டம் 130 அடியைக் கடந்த நிலையில், கடந்த கடந்த ஜூன் மாதம் முதல் தேதியில் பெரியாற்றில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல் போக சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது வரை வினாடிக்கு 1,800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.இதையடுத்து சின்னமனூர் பகுதியில் உள்ள கண்மாய்கள், குளங்கள், நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.
இந்த நீரைப் பயன்படுத்தி விவசாயிகள் 25 நாட்களில் நாற்றுகள் பாவி வளர்த்தெடுத்தனர். தொடர்ந்து நடவுப் பணியை தீவிரமாக மேற்கொண்டு வந்தனர். தற்போது வரை மார்க்கையன்கோட்டை, குச்சனூர், துரைச்சாமிபுரம், கூழையனூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 70 சதவீத நடவுப் பணிகள் நிறைவடைந்துள்ளன. ஒரு மாதத்தை நெருங்கியுள்ள இந்த நெற்பயிரில் அடியுரம் தெளித்து தண்ணீர் கட்டி தொடர்ந்து வளர்ந்து வருகின்றனர்.
தற்போது ஆங்காங்கு களைகள் முளைக்க தொடங்கியுள்ள நிலையில், களை பறிப்புப் பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இரண்டாம் கட்டமாக சின்னமனூர், பெருமாள் கோயில் பரவு, பிள்ளை குழிமேடு பரவு, வேம்படிக்களம் பரபு, முத்துலாபுரம் பிரிவு பரவு, கருங்கட்டான் குளம் பரவு, உடைய குளம் செங்குளம் போன்ற பகுதிகளில் தற்போது 80 சதவீதம் வரையில் நடவுப் பணிகள் முடிவடைய உள்ளது. தொடர்ந்து நடவுப் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இம்மாத இறுதிக்குள் நடவுப் பணிகள் முழுவதுமாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.