Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஓடிபோய் கைகுலுக்க முயன்ற போது பாக். பிரதமரை கண்டுகொள்ளாமல் கடந்து சென்ற சீன அதிபர் ஜின்பிங்: சர்வதேச அரங்கில் மீண்டும் தர்மசங்கடம்

தியான்ஜின்: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் எதிர்கொண்ட தர்மசங்கடமான நிகழ்வு இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், ரஷ்ய அதிபர் புதினுடனான சந்திப்பின் போது மொழிபெயர்ப்பு பயன்பாட்டை பயன்படுத்த முடியாமல் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் திணறினார், அந்த

நிகழ்வு பெரும் விமர்சனத்துக்குள்ளான நிலையில், தற்போது மீண்டும் ஒரு தர்மசங்கடமான சூழலை அவர் எதிர்கொண்டுள்ளார். சீனாவின் தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு நேற்று நடைபெற்றது.

இதில் சீனா-பாகிஸ்தான் இடையேயான உறவை வலுப்படுத்தவும், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் இரண்டாம் கட்டம் உள்ளிட்ட முன்னெடுப்புகள் குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் லி கியாங் ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பங்கேற்றார். இந்த மாநாட்டின் போது தலைவர்கள் குழு புகைப்படம் எடுத்த பிறகு, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நோக்கி ஷெபாஸ் ஷெரீப் கைகுலுக்க முயன்றார். ஆனால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் உரையாடலில் ஆழ்ந்திருந்த ஜி ஜின்பிங், ஷெரீப்பைக் கவனிக்காமல் கடந்து சென்றார்.

இந்த நிகழ்வு ஒரு காணொலியாக இணையத்தில் பரவி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளவாசிகள் பலரும், ஷெரீப்பின் செயல் பரிதாபகரமானது என்றும், உலக அரங்கில் பாகிஸ்தானுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் கடுமையாக விமர்சித்தனர். இதே மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினை வாழ்த்துவதற்காக ஷெரீப் அவசரமாக ஓடியதும் இணையத்தில் விமர்சனத்துக்குள்ளானது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் தூதரக முயற்சிகளை விட அவரது நடத்தை மீதான பொது மற்றும் அரசியல் விமர்சனங்களே ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது.