விமானத்தில் ஹாங்காங்குக்கு அனுப்பப்பட்டார் காஷ்மீரில் தடை செய்த பகுதிகளுக்கு சென்ற சீன இளைஞர் நாடு கடத்தல்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு சென்று விசா விதிகளை மீறியதற்காக கைது செய்யப்பட்ட சீன இளைஞர் ஹாங்காங்குக்கு நாடு கடத்தப்பட்டார். சீனாவை சேர்ந்தவர் ஹூ காங்தாய்(29). இவர் கடந்த மாதம் 19ம் தேதி சுற்றுலா விசாவில் இந்தியா வந்துள்ளார். புத்த மத தலங்களான வாரணாசி,ஆக்ரா, சார்நாத், கயா ஆகிய இடங்களை மட்டுமே பார்ப்பதற்கு அவருக்கு விசா அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால்,நவம்பர் 20ம் தேதி அவர் விமானம் மூலம் லே நகருக்கு சென்றார். லே விமான நிலையத்தில், வெளிநாட்டினர் வருகை பதிவேட்டிலும் அவர் பதிவு செய்யவில்லை.
கடந்த மாதம் லடாக்கில் இருந்த போது,ஜன்ஸ்கார் பகுதியில் உள்ள ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்வையிட்டுள்ளார். அதன் பிறகு டிச.1ம் தேதி காஷ்மீருக்கு சென்றுள்ளார். காஷ்மீரில் உள்ள ஹர்வான் புத்த மத தலத்துக்கு காங்தாய் சென்றுள்ளார். ஸ்ரீநகரில் பல இடங்களை சுற்றி பார்த்துள்ளார். அவந்திபோராவில் ராணுவ தலைமையகத்துக்கு அருகேயும் அவர் சென்றுள்ளார். காங்தாய் குறித்து உளவு துறையினர் தொடர்ந்து பல நாட்களாக கண்காணித்து வந்தனர். அவருடைய நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தியதால் கடந்த வாரம் அவரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். இந்த நிலையில் 10ம் தேதி டெல்லி கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து விமானம் மூலம் ஹூ காங்தாய் நாடு கடத்தப்பட்டார் என்று அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.


