கவ்லூன்: ஹாங்காங் ஓபன் பேட்மின்டன் ஆடவர் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்திய வீரர்கள் சிராக் ஷெட்டி, சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி இணை அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஹாங்காங்கில் ஹாங்காங் ஓபன் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஆடவர் இரட்டையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த சிராக் ஷெட்டி, சாத்விக் ரங்கிரெட்டி இணை, தைவான் வீரர்கள் பிங் வெ லின், செங் குவான் சென் இணையுடன் மோதினர்.
போட்டியின் துவக்கம் முதல் இந்திய வீரர்களின் ஆதிக்கமே காணப்பட்டது. முதல் செட்டில் அசத்தலாக ஆடிய இந்திய வீரர்கள் 21-17 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வென்றனர். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் சாதுரியமாக ஆடிய அவர்கள், 21-15 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி வாகை சூடினர். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வென்ற அவர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த மற்றொரு அரை இறுதிப் போட்டியில் சீன வீரர்கள் வாங் சாங், லியாங் வெய்கெங் இணை, தைவான் வீரர்கள் ஃபாங் சி லீ, ஃபாங் ஜென் லீ இணையுடன் மோதியது. இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய சீன வீரர்கள், 21-19, 21-8 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். வெற்றி பெற்ற இந்திய, சீன இணைகள், இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் மோதவுள்ளனர்.